கர்நாடக மாநிலம்  கடன் விவகாரம் மற்றும் கள்ளக்காதல் தகராறில் இளம்பெண் ஒருவரை கழுத்தறுத்துக் கொலை செய்த வாலிபரை போலீஸார் கைது செய்தனர். விஜயநகர் மாவட்டம் சேர்ந்தவர் உமா (28). இவருக்கும் ஆந்திராவைச் சேர்ந்த ராமாஞ்சேநயா என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு உமா அவரைப் பிரிந்து சப்லகட்டாவில் உள்ள தனது தாய் வீட்டிற்குத் திரும்பினார். தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வந்த உமா, அங்குள்ள ரயில்வே கேண்டீனில் வேலை செய்து வந்தார்.

ரயில்வே கேண்டீனில் வேலை செய்தபோது, உமாவுக்கும் காஜா உசேன் (28) என்ற வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. காஜா உசேன் அடிக்கடி இரவில் உமாவின் வீட்டிற்கு வந்து சென்றதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, உமா தனது தேவைகளுக்காக காஜா உசேனிடம் அவ்வப்போது கடனாகப் பணம் வாங்கியதாகத் தெரிகிறது. இந்தப் பணத்தை காஜா உசேன் மீண்டும் கேட்டு வந்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், சம்பவத்தன்று இரவு உமாவைத் தொடர்பு கொண்ட காஜா உசேன், அவரைத் தனியாகச் சந்திக்க வருமாறு அழைத்துள்ளார். அதன்படி, உமா தனது வீட்டின் அருகே உள்ள ஒதுக்குப்புறமான காலி இடத்திற்குச் சென்றுள்ளார். அங்கு வைத்து மீண்டும் பணத்தைத் திருப்பித் தருமாறு காஜா உசேன் வற்புறுத்தியுள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த காஜா உசேன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் உமாவின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

இதுகுறித்துத் தகவல் அறிந்த போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். சந்தேகத்தின் அடிப்படையில் காஜா உசேனைப் பிடித்து விசாரித்தபோது, அவர் உமாவைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.