வங்கதேசத்தில் இடைக்கால அரசு பொறுப்பேற்ற பிறகும், சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் மீது நடத்தப்படும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த 18 நாட்களில் மட்டும் இந்து சமூகத்தைச் சேர்ந்த 7 பேர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வங்கதேசத்தின் நௌகான் மாவட்டம் மஹாதேப்பூர் பகுதியில், திருட்டுச் சந்தேகத்தின் பேரில் மிதுன் சர்க்கார் (25) என்ற இளைஞரை ஒரு கும்பல் துரத்தியுள்ளது. அவர்களிடம் இருந்து தப்பிக்க கால்வாயில் குதித்த மிதுன் சர்க்கார், நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை மீட்ட காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வங்கதேசத்தில் பொதுத்தேர்தல் நெருங்கி வரும் வேளையில், சிறுபான்மையினரை இலக்கு வைத்து நடத்தப்படும் தாக்குதல்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது:

மணி சக்ரவர்த்தி: நரசிங்கடி மாவட்டத்தில் மளிகைக் கடை நடத்தி வந்த இவர், எவ்வித முன்விரோதமும் இன்றி கடைவீதியிலேயே மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

ரண பிரதாப் (45): ஜெசூர் மாவட்டம் மோனிராம்பூர் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

கோகன் சந்திர தாஸ்: ஜனவரி 3-ஆம் தேதி, கும்பல் வன்முறைக்கு ஆளான இவர் உயிருடன் தீயிட்டு கொளுத்தப்பட்டார். குளத்தில் குதித்தும் அவரைக் காப்பாற்ற முடியாமல் போனது.

பஜேந்திர பிஸ்வாஸ் (40): அன்சார் பாஹினி துணை ராணுவப் படை உறுப்பினரான இவர், மைமன்சிங் பகுதியில் சக ஊழியராலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.

அம்ரித் மண்டல் (29): ராஜ்ஜாரி பகுதியில் கும்பல் வன்முறையில் அடித்துக் கொல்லப்பட்டார்.

தீபு சந்திர தாஸ் (29): டிசம்பர் 18-ஆம் தேதி, மைமன்சிங் பகுதியில் அடித்துக் கொல்லப்பட்டு, உடல் எரிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றது.

ஜெனைதா மாவட்டத்தில் இந்து பெண் ஒருவர் மர்ம நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். அப்பெண்ணை மரத்தில் கட்டி வைத்து, முடியை வெட்டி சித்ரவதை செய்ததோடு, அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக நடத்தப்படும் இத்தகைய வன்முறைகள் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கவலை தெரிவித்துள்ளது. இது குறித்துப் பேசிய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “சுயாதீன அமைப்புகளின் தகவல்படி, வங்கதேச இடைக்கால அரசின் ஆட்சிக்காலத்தில் மட்டும் சிறுபான்மையினருக்கு எதிராக 2,900-க்கும் மேற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன” என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ச்சியான இந்தத் தாக்குதல்களால் வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள் தங்களின் அன்றாட வாழ்வாதாரத்திற்கே அஞ்சும் சூழல் நிலவுகிறது.