பிளாஸ்டிக் வகை (PVC) ஆதார் அட்டைகளைப் பெறுவதற்கான கட்டணத்தை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) உயர்த்தியுள்ளது. இதுவரை ரூ.50-ஆக இருந்த இந்தக் கட்டணம், தற்போது ரூ.75-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தற்போது பள்ளிச் சேர்க்கை முதல் வங்கிக் கணக்கு வரை அனைத்துச் சேவைகளுக்கும் 12 இலக்கங்கள் கொண்ட ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. காகித அட்டைகளைப் பாதுகாப்பது கடினம் என்பதால், ஏடிஎம் கார்டு போன்ற வடிவில் உள்ள பிவிசி பிளாஸ்டிக் ஆதார் அட்டைகளை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 2020-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பிவிசி கார்டுக்கான கட்டணம், சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு கடந்த 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த 75 ரூபாய் கட்டணத்திலேயே சேவை வரி மற்றும் தபால் மூலம் (Speed Post) வீட்டுக்கு அனுப்பப்படும் டெலிவரி கட்டணமும் அடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்களது ஆதார் எண்ணைப் பயன்படுத்தி இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த 5 பணி நாட்களுக்குள், சம்பந்தப்பட்ட நபரின் வீட்டு முகவரிக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் புதிய பிளாஸ்டிக் ஆதார் அட்டை அனுப்பி வைக்கப்படும்.

சாதாரண இ-ஆதார் மற்றும் காகித ஆதார் அட்டைகளைப் போலவே, இந்த பிளாஸ்டிக் ஆதார் அட்டையும் அனைத்து இடங்களிலும் அதிகாரப்பூர்வ ஆவணமாகச் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.