கேரள மாநிலத்தைச் சேர்ந்த கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள் மேரி (அங்கமாலி எழுவூர்) மற்றும் வந்தனா பிரான்சிஸ் (தலச்சேரி உதயகிரி) ஆகிய இருவரும் சமீபத்தில் சத்தீஷ்கர் மாநிலம் தூர்க் ரெயில் நிலையத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இவர்களுடன் நாராயண்பூர் பகுதியைச் சேர்ந்த சுக்மான் மண்டாவியையும் போலீசார் கைது செய்தனர். இவர்களை கைது செய்ய காரணமாக, 18 மற்றும் 19 வயதுடைய மூன்று இளம்பெண்களை சுக்மான் மண்டாவி கன்னியாஸ்திரிகளிடம் ஒப்படைத்துள்ளார் என்றும், அவர்கள் மதமாற்றத்திற்காக கடத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த வழக்கில், சத்தீஷ்கர் போலீசார் ஆள் கடத்தல் மற்றும் மதமாற்ற தடை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால், அதே நேரத்தில் கேரளத்தில் உள்ள கிறிஸ்தவ திருச்சபையின் கீழ் செயல்படும் மருத்துவமனை மற்றும் அலுவலகத்தில் வேலை செய்ய இளம்பெண்கள் வருவதாகவும், அவர்களது பெற்றோர்களிடம் முன்பே ஒப்புதல் பெற்றிருந்ததாகவும் கன்னியாஸ்திரிகள் தரப்பில் கூறப்பட்டது. எனவே, உண்மையை மறைத்துவிட்டு பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பெரும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த சம்பவம் வெளிவந்ததிலிருந்து, கேரளா முழுவதும் கன்னியாஸ்திரிகளுக்கு ஆதரவாக பல இடங்களில் கண்டனக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் பின்னணியில், அனைத்து இந்திய கத்தோலிக்க பேராயர்கள் கூட்டமைப்பு (CBCI) மோடி அரசு மீது கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பிரதமரும் உள்துறை மந்திரியும் உடனடியாக தலையிட்டு, இந்த விவகாரத்தில் நீதியை உறுதி செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயனும் தலையிட்டு, “கன்னியாஸ்திரிகள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மத சுதந்திரம் இந்திய அரசியலமைப்பில் உள்ள அடிப்படை உரிமை. இது சிறுபான்மையினரின் உரிமையை மீறும் செயல். பிரதமர் மோடி உடனடியாக நடவடிக்கை எடுத்து, நீதியை உறுதி செய்ய வேண்டும்” எனக் கடிதம் எழுதிக் கோரிக்கை விடுத்துள்ளார்.

தலைமையிலான கிறிஸ்தவ அமைப்பின் தலைவர் கர்தினால் கிளிம்மீஸ், திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, “இந்த சம்பவம் கிறிஸ்தவ சமூகத்தின் மீது விழுந்த தாக்குதலாகும். மத சுதந்திரத்தையும், சிறுபான்மையினரின் உரிமையையும் பறிக்கும் முயற்சி இது. இது அரசியல் அமைப்பை எதிர்த்து விடுக்கப்படும் சவாலாகும். இதுபோன்ற நிலைமை நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் உள்ளது. பாஜக அரசின் அணுகுமுறை திருப்திகரமாக இல்லை ” எனக் கடுமையாக விமர்சித்தார்.