உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி கடந்த 2017-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பெரும்பான்மையைப் பெற்று வெற்றி பெற்றது. அதன் பின், யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவியேற்றார். பின்னர், 2022-ம் ஆண்டில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலிலும் பாஜக மீண்டும் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக யோகி ஆதித்யநாத் மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.

இந்த நிலையில், யோகி ஆதித்யநாத் உ.பி. முதல்வராக நேற்று 8 ஆண்டு மற்றும் 130 நாளை நிறைவு செய்தார். இதன்மூலம், அம்மாநில அரசியல் வரலாற்றில் தொடர்ச்சியாக நீண்ட காலம் முதலமைச்சராக பதவி வகித்தவராக புதிய சாதனை படைத்துள்ளார். இதுவரை இந்த சாதனைக்கு சொந்தக்காரராக இருந்தவர், சுதந்திர இந்தியாவின் உ.பி. முதலாவது முதல்வராக இருந்த கோவிந்த் வல்லப் பந்த் ஆவார். அவர் 8 ஆண்டு 127 நாட்கள் பதவி வகித்திருந்தார். இப்போது அந்த சாதனையை யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார்.