அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நிரந்தர போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்காகப் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை எவ்வித உடன்படிக்கையும் எட்டப்படாமல் தோல்வியில் முடிவடைந்துள்ளது. அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தலைமையிலான குழுவினருக்கும், ஈரான் பிரதிநிதிகளுக்கும் இடையே சுமார் 21 மணி நேரம் நீடித்த இந்தத் தீவிரப் பேச்சுவார்த்தையில், ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.
மேலும் அமெரிக்காவின் நியாயமற்ற கோரிக்கைகளே இந்த முட்டுக்கட்டைக்குக் காரணம் என ஈரான் தரப்பு குற்றம் சாட்டியுள்ளது. ஈரான் மக்களின் தேசிய நலனைக் கருத்தில் கொண்டு தங்களது பிரதிநிதிகள் நீண்ட நேரம் விவாதங்களில் ஈடுபட்ட போதிலும், அமெரிக்காவின் பிடிவாதமான நிலைப்பாடு முன்னேற்றத்தைத் தடுத்ததாக ஈரான் விளக்கியுள்ளது.
இந்நிலையில் முன்னதாக இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட இரண்டு வார கால இடைக்கால போர் நிறுத்தம் முடிவுக்கு வரவுள்ள நிலையில், இந்த முக்கியப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்திருப்பது சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த தோல்வியைத் தொடர்ந்து அமெரிக்கப் பிரதிநிதிகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
