சீனா மற்றும் தைவான் இடையிலான மோதல் போக்கு மீண்டும் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. தைவான் நாட்டை மீண்டும் தன்னுடன் இணைக்கத் துடிக்கும் சீனா, அதன் சுதந்திரத்தை ஒருபோதும் ஏற்க முடியாது என்பதில் உறுதியாக உள்ளது. சமீபத்தில் தைவானின் முக்கிய எதிர்க்கட்சியான குமிங்டாங் கட்சித் தலைவி செங் லி-வுன், பீஜிங்கில் சீன அதிபர் ஜின்பிங்கைச் சந்தித்துப் பேசினார்.
இந்தப் பேச்சுவார்த்தையின் போது, தைவானின் தனி நாடு கோரிக்கையைச் சீனா எக்காலத்திலும் அங்கீகரிக்காது என அதிபர் ஜின்பிங் மிகவும் திட்டவட்டமாகத் தெரிவித்தார். மறுபுறம், பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்தாலும் சீனா தனது ராணுவ பலத்தைக் காட்டி மிரட்டுவதை நிறுத்தவில்லை. சீனாவின் 16 போர் விமானங்கள் திடீரென தைவான் வான் எல்லைக்குள் நுழைந்து அச்சுறுத்தல் விடுத்தன.
இதனால் சீனாவின் இந்த இரட்டை நிலைப்பாட்டைத் தைவான் பாதுகாப்பு அமைச்சகம் கடுமையாக விமர்சித்துள்ளது. ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு, மறுபுறம் ராணுவ மிரட்டல் விடுப்பது சீனாவின் நாடகம் என்று தைவான் கூறியுள்ளது. மேலும், “தைவானின் எதிர்காலத்தைத் தைவான் மக்கள் மட்டுமே தீர்மானிக்க முடியும்” என அந்நாட்டு அதிபர் அலுவலகம் பதிலடி கொடுத்துள்ளதால், எல்லையில் மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
