ஹார்முஸ் ஜலசந்தி வழியாக அமெரிக்காவின் இரண்டு போர்க்கப்பல்கள் நுழைந்ததாக வெளியான தகவல்களை ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது. ஈரான் இப்பகுதியில் அமைத்துள்ள கண்ணிவெடிகளை அகற்றும் நோக்கில் இந்தக் கப்பல்கள் சென்றதாகக் கூறப்பட்ட நிலையில், ஈரானின் கூட்டு ராணுவ கமாண்ட் செய்தி தொடர்பாளர் இந்தச் செய்தியை மறுத்துள்ளார்.
மேலும், அமெரிக்கக் கப்பல் ஒன்று அந்தப் பகுதிக்குள் நுழைய முயன்றபோது, ஈரான் படைகள் அதனை எச்சரித்துத் திருப்பி அனுப்பியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே இரண்டு வார கால இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சரக்கு போக்குவரத்து எளிதாக நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
இருப்பினும், ஹார்முஸ் ஜலசந்தியின் பாதுகாப்புப் பொறுப்பு ஈரானியப் படைகளின் வசமே உள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், பாகிஸ்தானில் நடைபெற்ற இரு நாடுகளுக்கு இடையேயான போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்படிக்கையும் எட்டப்படவில்லை என்று அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளமை இப்பகுதியில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
