விருதுநகரில் நடைபெற்ற அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளுக்கு இடையேதான் நேரடிப் போட்டி நிலவுவதாகக் குறிப்பிட்டார்.

2026 சட்டமன்றத் தேர்தல் அதிமுகவிற்கான வெற்றிக் காலமாக அமையும் என்றும், எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் கட்சி வலுவாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், அதிமுகவில் போட்டியிட ஆயிரக்கணக்கானோர் விருப்ப மனு அளித்துள்ள நிலையில், மற்றவர்கள் ஆட்சி அமைக்க வேண்டுமானால் தங்களின் ஆதரவு தேவைப்படும் சூழலே நிலவுவதாக அவர் உறுதியாகக் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை மறைமுகமாக விமர்சித்த ராஜேந்திர பாலாஜி, பூத் கமிட்டி கட்டமைப்பு கூட இல்லாத சிலர் அரசியலில் சித்து விளையாட்டு காட்டி வருவதாகச் சாடினார்.

சினிமா நட்சத்திரங்களைக் காண கூட்டம் கூடும் என்றாலும், அது வாக்குளாக மாறாது என்றும், 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த தவெகவிடம் பலம் உள்ளதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

தேர்தல் களம் விஜய்க்குப் பல புதிய பாடங்களைக் கற்பிக்கும் என்றும், அவரது அரசியல் ஆசை நிறைவேறாமல் போக வாய்ப்புள்ளதாகவும் அவர் காட்டமாகத் தெரிவித்தார்.