தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2015 முதல் 2025 வரையிலான 11 ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தைச் சேர்ந்த 3,068 மீனவர்கள் இலங்கை கடற்படையால் மிகக் கொடூரமாகக் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களின் 439 விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் அதிகாரப்பூர்வமாகப் போட்டுடைக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக கடந்த 2024ஆம் ஆண்டில் மட்டும் அதிகபட்சமாக 498 தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டு எல்லையில் இலங்கை ராணுவம் அராஜகத்தின் உச்சத்திற்கே சென்றுள்ளது அம்பலமாகியுள்ளது.

​மேலும், 2025ஆம் ஆண்டில் மட்டும் யாழ்ப்பாணத் துணைத் தூதரகத்தின் வரம்பிற்குட்பட்ட எல்லைப் பகுதிகளில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களில் 19 பேருக்கு இலங்கை நீதிமன்றங்கள் இரக்கமின்றி சிறைத்தண்டனை விதித்து சிறையில் அடைத்துள்ளன. கடந்த 2017ஆம் ஆண்டு வரலாற்றிலேயே மிக அதிகபட்சமாக தமிழக மீனவர்களின் 82 வாழ்வாதாரப் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இந்த RTI பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தூதரகமே இந்த அதிர்ச்சி புள்ளிவிவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளதால், தமிழக மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய, மாநில அரசுகள் உடனடியாக துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலுத்துள்ளது.