ஐபிஎல் 2026 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக விளையாடவுள்ள வைபவ் சூர்யவன்ஷி, 20 ஆண்டுகள் பழமையான ஒரு உலக சாதனையைச் சமன் செய்யும் அரிய வாய்ப்பைப் பெற்றுள்ளார். டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 1,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற பெருமையை ஆஸ்திரேலியாவின் பிராட் ஹாட்ஜ் (23 இன்னிங்ஸ்) வைத்துள்ளார்.
இதுவரை 1,000-க்கும் மேற்பட்ட பேட்ஸ்மேன்கள் இந்த மைல்கல்லை எட்டியிருந்தாலும், ஷான் மார்ஷைத் தவிர வேறு யாராலும் ஹாட்ஜின் இந்த வேகத்தை ஈடுகட்ட முடியவில்லை. தற்போது 22 இன்னிங்ஸ்களில் 901 ரன்கள் எடுத்துள்ள வைபவ், தனது 23-வது இன்னிங்ஸில் இன்னும் 99 ரன்கள் எடுத்தால் இந்தச் சாதனையைச் சமன் செய்வார்.
தனது 15 வயதிலேயே இத்தகைய பிரம்மாண்டமான சாதனையைப் படைக்க வைபவ் சூர்யவன்ஷிக்கு இதுவே கடைசி வாய்ப்பாகும். ஒருவேளை அவர் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 99 ரன்கள் அல்லது சதம் விளாசினால், டி20 வரலாற்றில் அதிவேகமாக 1,000 ரன்களை எட்டிய உலகின் மூன்றாவது வீரர் என்ற வரலாற்றுச் சிறப்பைப் பெறுவார்.
2006-ல் படைக்கப்பட்ட இந்தச் சாதனைக்கு இன்றுவரை பல ஜாம்பவான்கள் சவால் விடத் தவறிய நிலையில், இளம் வீரர் வைபவ் இன்று ஹைதராபாத் மைதானத்தில் புதிய சரித்திரம் படைப்பாரா என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே எகிறியுள்ளது.
