ஐபிஎல் 2026 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிக்காக அறிமுகமான விதர்பா வேகப்பந்து வீச்சாளர் பிரஃபுல் ஹிஞ்ச், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் யாரும் எதிர்பார்க்காத ஒரு வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.

போட்டியின் முதல் ஓவரிலேயே அதிரடி வீரர் வைபவ் சூர்யவன்ஷி, துருவ் ஜூரல் மற்றும் லுவான்ட்ரே பிரிட்டோரியஸ் என மூன்று முக்கிய விக்கெட்டுகளைச் சாய்த்து, ஐபிஎல் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸின் முதல் ஓவரிலேயே 3 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றார். தனது இரண்டாவது ஓவரில் ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக்கையும் வீழ்த்திய அவர், 13 டாட் பந்துகளுடன் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

“>

“நான் அறிமுகப் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்துவேன் என்று கடந்த ஆண்டே எழுதி வைத்திருந்தேன்; அந்த நம்பிக்கையே இன்று பலித்தது” என ஆட்ட நாயகன் விருதை வென்ற பிறகு ஹிஞ்ச் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். பந்துவீச்சுப் பயிற்சியாளர் வருண் ஆரோனின் ஆலோசனையின்படி, சூர்யவன்ஷியை முதல் பந்திலேயே பவுன்சர் மூலம் வீழ்த்திய திட்டம் கச்சிதமாக வேலை செய்ததாகவும் அவர் கூறினார்.

தனது ரோல் மாடலான பேட் கம்மின்ஸுடன் இணைந்து பந்துவீசுவதை வாழ்நாள் கனவாகக் கருதும் இந்த 24 வயது இளம் வீரர், ரஞ்சி கோப்பை மற்றும் சையத் முஷ்டாக் அலி தொடர்களில் காட்டிய அபாரமான ஃபார்மை இப்போது ஐபிஎல் மேடையிலும் நிரூபித்துள்ளார்.