தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொம்மசமுத்திரம் கிராமத்தில் லட்சுமணன்- கன்னியம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினர் சீசனுக்கு ஏற்றவாறு பழங்களை வாங்கி வந்து விற்பனை செய்வது வழக்கம். இவர்களுக்கு ஹரிப்பிரியா(9), தியா ஸ்ரீ(7) என்ற இரண்டு மகள்களும், சக்தி தரன்(2) என்ற மகனும் இருந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன் மனைவி இருவரும் தர்பூசணி வாங்குவதற்காக ஓசூர் அருகே இருக்கும் மதகொண்டபள்ளிக்கு சென்றுள்ளனர்.

இதனால் சக்தி தரனை கன்னியம்மாள் தனது அக்காள் பாப்பாத்தியிடம் ஒப்படைத்து விட்டு சென்றுள்ளார். மேலும் ஹரிப்பிரியாவும், தியாவும் உறவினர் வீட்டில் இருந்துள்ளனர். நேற்று முன்தினம் பாப்பாத்தி சக்திதரனை வீட்டில் விட்டு விட்டு மாடுகளுக்கு வைக்கோல் போடுவதற்காக சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது சக்திதரன் அங்கு இல்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பாப்பாத்தி அனைத்து இடங்களிலும் தேடிப் பார்த்தபோது வீட்டிற்கு அருகில் இருக்கும் தரைமட்ட தொட்டியில் சக்திதரன் தண்ணீரில் மூழ்கிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக குழந்தையை மீட்டு பெண்ணாகரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு குழந்தையை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் சக்திதரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.