தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ராமண்ணன்கொட்டாய் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு முத்து என்ற மகன் உள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜேந்திரன் இறந்துவிட்டார். இதனால் லட்சுமி தனது மகனுடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு லட்சுமி கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரிடம் 2 லட்சத்து 68 ஆயிரம் ரூபாயை முன்பணமாக வாங்கி அவரது செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்துள்ளனர்.

இதனையடுத்து உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் லட்சுமி வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். நேற்று முன்தினம் கிருஷ்ணன் நான்கு பேருடன் ராமண்ணன் கொட்டாய்க்கு காரில் சென்று லட்சுமியை கடத்தி சென்றுள்ளார். இதனை தடுக்கும் முயன்ற நபர்களை கிருஷ்ணன் மிரட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து அறிந்த முத்து தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

அதில் 2 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய்க்கு பதிலாக 5 லட்சம் ரூபாய் கேட்டு தனது தாயை கிருஷ்ணன் கடத்தி சென்றதாக குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் தனிப்படை போலீசார் சுமார் 5 மணி நேரத்தில் செங்கல் சூலையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த லட்சுமியை பத்திரமாக மீட்டனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய கோபி, விஜயகுமார், ராஜ்குமார், பிரபு ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் கிருஷ்ணனை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.