சென்னையில் உள்ள புளியந்தோப்பை அடுத்த சூளை ஆவடி சீனிவாசன் தெருவில் வசிப்பவர் வளர்மதி (42). இவர் கணவர் ரமேஷ் பானிபூரி கடை நடத்தி வியாபாரம் செய்து வருகிறார். வளர்மதியின் இணையவழி  விளம்பரம் செய்துள்ளார். அதில் தனக்குள்ள மற்றொரு வீடு ஒன்றை வாடகைக்கு விடுவதாக போட்டுள்ளார். இந்நிலையில் கடந்த 3-ஆம் தேதி இது பற்றி தொலைபேசியில் நபர் ஒருவர் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதில் அவரின் பெயர் பவானி சிங் என்றும், ராஜஸ்தானில் ராணுவ அதிகாரியாக பணியாற்றி வருவதாகவும், தற்போது சென்னைக்கு மாறுதலாகி வந்துள்ளதால், வீடு வாடகைக்கு தேவை என கூறியுள்ளார். மேலும் அந்த வீட்டிற்கு அட்வான்ஸ் தொகையும் கொடுக்கிறேன் என கூறியுள்ளார்.

உடனே செல்போன் பணபரிமாற்ற செயலி மூலம் அவரது தொலைபேசி எண்ணிற்கு ரூ.1 மட்டும் அனுப்பும்படி வளர்மதியிடம் அந்த நபர் கேட்டுள்ளார். பின் பவானி சிங் பதிலுக்கு ரூ.2 அனுப்பியுள்ளார்.  மேலும் வளர்மதியின் வங்கி கணக்கு விவரங்களை பற்றியும் கேட்டுள்ளார். ஆனாலும் இதை நம்பி விவரங்களை வளர்மதி தர மறுத்தபோது, அந்த நபர் அவருடைய ஆதார் உள்ளிட்ட அடையாள விவரங்களை அனுப்பி வைத்துள்ளார். இதனை தொடர்ந்து அதை உண்மை என நம்பிய வளர்மதி தனது வங்கி விவரங்களை அந்த நபருக்கு அனுப்பியுள்ளார்.

இதனையடுத்து அடுத்த சில நிமிடங்களில் வளர்மதியின் வங்கி கணக்கில் இருந்து 1 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டுள்ளதாக அவரது போனுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதை பார்த்து வளர்மதி அதிர்ச்சியடைந்து, பவானி சிங்கை தொடர்பு கொண்ட போது செல்போன் அணைக்கப்பட்டு இருந்தது. பின் வளர்மதி போலீசில் புகார் கொடுத்ததை தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.