மத்தியப் பிரதேசத்தின் ரட்லோம் மாவட்டத்தைச் சேர்ந்த ஏழு வயது சிறுவன் சுபம் நிமனா, கடந்த இரண்டு மாதங்களாக கடுமையான வயிற்று வலி, வாந்தி மற்றும் எடை இழப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்தான். அவனது குடும்பத்தினர் ஒரு தனியார் மருத்துவமனையில் 2 லட்சம் ரூபாய் செலவு செய்து சிகிச்சை அளித்தனர், ஆனால் எவ்வித பலனும் இல்லை.
இதனால், அவர்கள் சிறுவனை அகமதாபாத் சிவில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு CT ஸ்கேன் மற்றும் எண்டோஸ்கோபி பரிசோதனைகள் செய்தபோது, சிறுவனின் வயிறு மற்றும் சிறுகுடலில் ஒரு அசாதாரண முடிச்சு (ஹேர் பால், புல், ஷூலேஸ் நூல்கள்) இருப்பது கண்டறியப்பட்டது. இதை மருத்துவத்தில் ட்ரைக்கோபெஜோவர் (Trichobezoar) என்று அழைப்பார்கள்.
மருத்துவர் ராம்ஜியின் தலைமையில் மருத்துவர்கள் குழு, லாபரோடமி மூலம் சிறுவனின் வயிற்றில் இருந்த அந்த முடிச்சை அகற்றியது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு, ஆறு நாட்களுக்கு சிறுவனுக்கு திரவ உணவு மட்டுமே கொடுக்கப்பட்டது. ஏழாவது நாளில், முடிச்சு முற்றிலும் அகற்றப்பட்டதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
பின்னர், மனநல நிபுணர்கள் மூலம் சுபமுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு, வீட்டிற்கு அனுப்பப்பட்டான். மருத்துவர் கூறுகையில், “குழந்தைகளுக்கு ட்ரைக்கோபெஜோவர் மிகவும் அரிது, 0.3-0.5% பேருக்கு மட்டுமே வரும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் அசாதாரண நடத்தைகளைக் கண்டால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்” என்றார்.
