உத்தர பிரதேசத்தின் மோரடாபாத் நகரை சேர்ந்த 22 வயது ஓவியரான யோகேஷ், செப்டம்பர் 18 அன்று அக்வான்பூர் பைபாஸ் அருகே உள்ள ஒரு சுடுகாட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது தலை மற்றும் முகத்தில் கடுமையான காயங்கள் இருந்ததால், இது கொலை என போலீஸார் உறுதி செய்தனர்.

கொலைக்குப் பின், யோகேஷின் தொலைபேசியிலிருந்து டயல்-112 என்ற அவசர எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. அழைப்பில், தன்னை யோகேஷ் என்று கூறிய ஒருவர், மூன்று பேர் தன்னைத் தாக்குவதாகவும், உதவி தேவை என்றும் கூறினார். ஆனால், அந்த அழைப்பு திடீரென துண்டிக்கப்பட்டது. இதை வைத்து முதலில் போலீஸார் விசாரணையைத் தொடங்கினர்.

விசாரணையில் அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளியாகின. அந்த அழைப்பு யோகேஷின் குரல் இல்லை என்பது கால் ரெகார்டுகளை ஆய்வு செய்தபோது தெரிந்தது. உண்மையில், கொலையாளிகள் யோகேஷின் தொலைபேசியைப் பயன்படுத்தி, போலீஸாரை ஏமாற்ற முயன்றனர். முக்கிய குற்றவாளி மனோஜ், யோகேஷின் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்தார். ஆனால், அந்தப் பெண்ணின் தந்தையும் சகோதரரும் அவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் கோபமடைந்த மனோஜ், தனது உறவினர் மஞ்சீத்துடன் சேர்ந்து, யோகேஷை கொலை செய்து, அந்த குற்றத்தை பெண்ணின் தந்தை மற்றும் சகோதரர் மீது பழி போட திட்டமிட்டார். இதற்காக, யோகேஷை கொன்ற பின், அவரது தொலைபேசியைப் பயன்படுத்தி போலீஸாருக்கு அழைப்பு செய்தனர். ஆனால், போலீஸாரின் தீவிர விசாரணையில் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.

குற்றவாளிகளைத் தேடியபோது, மனோஜும் மஞ்சீத்தும் போலீஸார் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு பதிலடியாக போலீஸாரும் திருப்பி சுட்டதில், மனோஜுக்கு காயம் ஏற்பட்டது. தற்போது இருவரையும் கைது செய்து, போலீஸார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம், குற்றவாளிகள் தங்கள் குற்றத்தை மறைக்க எவ்வளவு தூரம் திட்டமிடுகிறார்கள் என்பதை தெளிவாகக் காட்டுகிறது.