தமிழகத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் திருநாளை முன்னிட்டு தலா மூவாயிரம் ரூபாய் ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு ஆகியவை வழங்கப்பட உள்ளன.

இதற்கான பச்சரிசி மற்றும் சர்க்கரை ஆகியவை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்குகளில் இருந்து நியாய விலைக் கடைகளுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும் கரும்பு கொள்முதல் செய்யும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் பயனாளிகளுக்கு வீடு வீடாகச் சென்று டோக்கன்கள் விநியோகிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்தச் சிறப்புத் திட்டத்தை வரும் வியாழக்கிழமை அன்று சென்னை ஆலந்தூரில் நடைபெறும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகளில் வரும் பதிமூன்றாம் தேதி வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் சிரமமின்றி பொங்கல் பரிசைப் பெறுவதற்கு ஏதுவாக வரும் ஞாயிற்றுக்கிழமை அன்றும் நியாய விலைக் கடைகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பு பொங்கல் பண்டிகையைக் கொண்டாடும் ஏழை எளிய மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.