சமூக வலைத்தளங்களில் ஆபாசமாகப் பேசுவது மற்றும் ஆபாசத்தை தூண்டும் வகையில் வீடியோ பதிவிடுவது தொடர்பாக நடிகை தர்ஷா குப்தா உட்பட 12 பேர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர்களைக் கைது செய்யப் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
சேலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் அஜித் என்பவர், மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களில் சிலர் 18 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் வகையில் பதிவுகளை வெளியிடுவதாகக் குறிப்பிட்டிருந்தார்.
குறிப்பாகத் திருச்சி சாதனா, நடிகை தர்ஷா குப்தா, சூர்யா பிரபா, ஹனி சென்னை, அபிநயா சித்ரா, பிரியங்கா ராஜ், சரண்யா, சந்தோஷ் உள்ளிட்ட 12 பேர் சமூக வலைத்தளங்களில் நேரலையில் வந்து ஆபாசத்தை தூண்டும் வகையில் பேசி லட்சக்கணக்கில் சம்பாதிப்பதாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டது.
இவர்களின் இதுபோன்ற செயல்பாடுகளால் இளைஞர்கள் மற்றும் இளம் சமூகத்தினர் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், எனவே சமூக வலைத்தளங்களில் ஆபாசமாகப் பேசுபவர்கள் மீது உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் தனது மனுவில் வலியுறுத்தியிருந்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் முதற்கட்ட விசாரணை நடத்திய சைபர் கிரைம் போலீசார், நடிகை தர்ஷா குப்தா, திருச்சி சாதனா உட்பட 12 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள அவர்களை விரைந்து கைது செய்யக் காவல் துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
