ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு வெளியான நகை நிறுவனத்தின் விளம்பரம் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. நடிகை கிருத்தி சனன் இடம்பெறும் அந்த விளம்பரத்தில், சகோதரருக்கு ராக்கி கட்டுவதுடன், அவரது செல்ல நாய்க்கும் ராக்கி கட்டும் காட்சி இடம்பெற்றுள்ளது. இதுவே பல்வேறு விதமான கருத்துகளுக்கு காரணமாகியுள்ளது.

செல்லப்பிராணிகளையும் குடும்பத்தின் ஒரு அங்கமாகக் கருதும் நவீன வாழ்க்கை முறையை வெளிப்படுத்தும் நோக்கத்திலேயே இந்தக் காட்சி அமைக்கப்பட்டதாகத் தெரிகிறது. சிலர் இதை செல்லப்பிராணிகள் மீதான அன்பை வெளிப்படுத்தும் புதிய அணுகுமுறை என வரவேற்றுள்ளனர். அதேவேளையில், சிலர் ரக்ஷா பந்தனின் பாரம்பரிய சடங்குகளுடன் இதை இணைப்பது சரியா என கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த விளம்பரத்தில் கீர்த்தி சனோன் உடை மற்றும் பண்டிகையை நவீன முறையில் காட்சிப்படுத்திய விதம் குறித்தும் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக வழக்கமான பூஜைத் தட்டு, திலகம் உள்ளிட்ட பாரம்பரிய அம்சங்கள் இடம்பெறாதது குறித்தும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில்,கீர்த்தி சனோன் இந்த விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ளார். பண்டிகையின் உண்மையான அர்த்தம் ஒருவர் அணியும் உடையில் இல்லை என்றும், அதன் உணர்விலும் பாரம்பரியத்தின் மீதான மரியாதையிலும் இருப்பதாக அவர் கூறியுள்ளார். மேலும், தங்களது குடும்பத்தில் செல்லப்பிராணிகளும் குடும்ப உறுப்பினர்களாக இருப்பதால், அந்த அன்பையும் விளம்பரம் வெளிப்படுத்துவதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.