சிப்ஸ், குளிர்பானங்கள் உள்ளிட்ட பொட்டல உணவுகளில் சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பு அதிகமாக இருந்தால், அதை நுகர்வோருக்கு முன்கூட்டியே தெரிவிக்கும் வகையில் பாக்கெட்டின் முன்புறத்தில் எச்சரிக்கை லேபிள்களை கொண்டுவரும் முயற்சி இந்தியாவில் நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றமும் உணவு பாதுகாப்பு அமைப்புகளிடம் கேள்வி எழுப்பியுள்ளது.
முன்பக்கத்தில் தெளிவாகத் தெரியும் வகையில் சிவப்பு நிற எச்சரிக்கை குறியீடுகள் வைக்கப்பட்டால், அதிக சர்க்கரை, உப்பு அல்லது கொழுப்பு உள்ள பொருட்களை நுகர்வோர் எளிதில் அடையாளம் காண முடியும் என்பது சுகாதார நிபுணர்களின் கருத்தாக உள்ளது. ஆனால், உணவு நிறுவனங்களின் தரப்பில் இதுபோன்ற குறியீடுகள் நுகர்வோருக்கு குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்றும், உணவின் அளவைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவிக்கிறது.
இதற்கிடையில், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் முன்பக்க எச்சரிக்கை லேபிள் திட்டத்தில் இருந்து பின்வாங்கியதாகவும், அதற்கு பதிலாக சர்க்கரை, கொழுப்பு, உப்பு உள்ளிட்ட ஊட்டச்சத்து விவரங்களை கருப்பு–வெள்ளை அட்டவணை வடிவில் குறிப்பிடும் திட்டத்தை முன்வைத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த முடிவு குறித்து சுகாதார ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அதிக சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பு கொண்ட பொட்டல உணவுகளை நுகர்வோர் எளிதாக அடையாளம் காண்பதற்கு தெளிவான முன்பக்க எச்சரிக்கை உதவும் என்பது அவர்களின் வாதம். இதுதொடர்பான விவகாரம் தற்போது உச்சநீதிமன்றத்தின் கவனத்திலும் உள்ளது.
