கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள குடும்ப நல நீதிமன்றம், விவாகரத்து வழக்கு ஒன்றில் மனைவி மற்றும் குழந்தைக்கு மாதம் ரூ.9,000 ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று கணவருக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து கணவர் தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை நீதிபதி சில்லா குர் சுமலதா விசாரித்தார். வழக்கு விசாரணையின் போது கணவர் தரப்பு வழக்கறிஞர் முன்வைத்த வாதங்கள் சமூகத்தின் சில பாரம்பரிய சிந்தனைகளை பிரதிபலிப்பதாக இருந்தன. அதாவது, “எனது கட்சிக்காரரின் மனைவி கணவரின் பெற்றோரைச் சரியாகக் கவனித்துக் கொள்ளவில்லை; வீட்டு வேலைகளையும் ஒழுங்காகச் செய்யவில்லை; அதுமட்டுமின்றி, கணவரின் அனுமதி பெறாமல் பலமுறை தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்றுள்ளார்” என்பதே அந்த வாதம்.
இருதரப்பு வாதங்களையும் கவனமாகக் கேட்டறிந்த நீதிபதி சில்லா குர் சுமலதா, குடும்ப உறவுகள் மற்றும் பெண்களின் சுதந்திரம் குறித்து மிக ஆழமான மற்றும் தெளிவான தீர்ப்பை வழங்கினார். அந்தத் தீர்ப்பில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் அனைவரையும் சிந்திக்க வைப்பதாக உள்ளன. அதாவது மனைவியானவள் கணவரின் பெற்றோரை முழுமையாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. அவரவர் பெற்றோரைப் பாதுகாத்து கவனிக்கும் முதன்மைப் பொறுப்பு அந்தந்த மகன் மற்றும் மகள்களுக்கு மட்டுமே உண்டு. இதில் மருமகளுக்கோ அல்லது மருமகனுக்கோ சட்டப்படி அந்தப் பொறுப்பு கிடையாது.
ஒரு இந்தியப் பெண் தனது பெற்றோர் வீட்டுக்குச் செல்லும்போது, கணவர் வீட்டில் உள்ள அனைவரிடமும் அனுமதி பெற வேண்டும் என்று எதிர்பார்ப்பது முற்றிலும் தவறு. தனது விருப்பத்தின்படி பெற்றோர் வீட்டுக்குச் செல்வது எந்தவொரு பெண்ணின் அடிப்படை உரிமையாகும். திருமணம் என்பது மற்றொருவரின் தனிப்பட்ட சுதந்திரத்தையும் விருப்பத்தையும் கட்டுப்படுத்துவதற்கோ, அவர் மீது தனது ஆதிக்கத்தைச் செலுத்துவதற்கோ அல்லது அவரைத் தன்வசம் முழுமையாக அடிமைப்படுத்தி வைத்துக் கொள்வதற்கோ சட்டப்படி வழங்கப்பட்ட உரிமம் அல்ல.
மனைவி எப்போதும் தான் விரும்பும் அளவுக்குத் தன் கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டும் என்று யாரையும் கட்டாயப்படுத்த முடியாது என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேலும் குடும்ப வாழ்க்கையில் ஆணாதிக்க மனப்பான்மைக்கும் கட்டுப்பாடுகளுக்கும் எதிராக நீதிமன்றம் எழுப்பியிருக்கும் இந்த வலுவான குரல், சம உரிமைகள் மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்தின் அவசியத்தை மீண்டும் ஒருமுறை சமூகத்திற்கு உணர்த்தியுள்ளது.
