வீடுகளில் செய்யப்படும் எந்தவொரு சமையலாக இருந்தாலும், அதன் சுவைக்கு அஸ்திவாரமாக விளங்குவது வெங்காயம். ஆனால், அதே வெங்காயம் இப்போது சாமான்ய மக்களின் கண்களில் கண்ணீரை வரவழைக்கத் தொடங்கியுள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரா மாநிலங்களிலிருந்து தினமும் வெங்காயம் விற்பனைக்குக் கொண்டுவரப்படுவது வழக்கம். வழக்கமாக 55-க்கும் மேற்பட்ட லாரிகளில் வந்து இறங்கும் வெங்காயம், தற்போது கடந்த சில நாட்களாகப் படிப்படியாகக் குறைந்து வருவதுதான் இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணம்.
மகாராஷ்டிராவில் பெய்த கனமழையால் வெங்காய உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனுடன், வெளிநாடுகளுக்கான ஏற்றுமதியும் திடீரென அதிகரித்துள்ளதால் சந்தையில் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் நேரடித் தாக்கமாக கோயம்பேடு சந்தைக்கு இன்று வெறும் 45 லாரிகளில் மட்டுமே வெங்காயம் வந்துள்ளது.
வெங்காய வரத்து குறைந்ததன் எதிரொலியாக விலையும் தாறுமாறாக உயரத் தொடங்கியுள்ளது. வெறும் 10 நாட்களுக்கு முன்பு கோயம்பேடில் கிலோ ரூ.35-க்கு விற்கப்பட்ட தரமான நாசிக் வெங்காயம், தற்போது திடீரென ரூ.55 ஆக உயர்ந்துள்ளது. இதுவே வெளிச்சந்தைகளில் சில்லறை விற்பனையில் கிலோ ரூ.70 வரை விற்கப்படுகிறது. பெரிய வெங்காயத்தின் நிலையே இதுவென்றால், சின்ன வெங்காயத்தின் நிலையோ இன்னும் மோசம்; மொத்த விற்பனையில் கிலோ ரூ.80 வரையிலும், சில்லறை கடைகளில் ரூ.110 வரையிலும் தொட்டு பறக்கிறது!
இந்த விலை உயர்வை எப்படியாவது கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக, மத்திய அரசு தனது கையிருப்பில் உள்ள வெங்காயத்தை சென்னை, மதுரை, டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு ரெயில் மூலம் அனுப்பி வருகிறது. மேலும், கூட்டுறவு அங்காடிகள் மூலம் ஒரு கிலோ வெங்காயத்தை மானிய விலையில் ரூ.35-க்கு விற்பனை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இருப்பினும், பருவம் தவறிய மழை, வானிலை மாற்றங்கள் மற்றும் தொடர்ந்து குறைந்து வரும் லாரி வரத்து ஆகியவற்றைக் கருத்தில் கொண்டுள்ள வியாபாரிகள் ஒரு அதிர்ச்சித் தகவலையும் வெளியிட்டுள்ளனர். நிலைமை இப்படித் தொடர்ந்தால், வரும் நாட்களில் வெங்காய விலை மேலும் அதிகரித்து, ஒரு கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரை செல்ல வாய்ப்புள்ளதாக அவர்கள் எச்சரித்துள்ளனர். பாக்கெட்டையும், இல்லத்தரசிகளின் நிம்மதியையும் பதம் பார்க்கத் தொடங்கியுள்ள இந்த விலை உயர்வு மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
