வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்க மக்கள் அனைவரும் ஒன்றிணைந்தால் என்னவெல்லாம் சாதிக்க முடியும் என்பதற்கு ஜப்பான் நாட்டின் ஐயோமாரி மாகாணத்தில் நடந்துவரும் இந்த நிகழ்வு ஒரு சிறந்த உதாரணம். ஜப்பானின் புகழ்பெற்ற 360 டன் எடையுள்ள ஹிரோசகி கோட்டையின் முதன்மைக் கோபுரத்தை, அதன் அசல் கல் அடித்தளத்தை நோக்கி மீண்டும் நகர்த்துவதற்காக சுமார் 1,800 தன்னார்வலர்கள் கைகோர்த்துள்ளனர்.
இந்தச் சாதனை முயற்சியில், திறந்தவெளியில் அமைக்கப்பட்ட தண்டவாளங்களின் மீது கோட்டையை வைத்து, மக்கள் சனிக்கிழமை 1.13 மீட்டரும், ஞாயிற்றுக்கிழமை 1.09 மீட்டரும் என வெறும் இரண்டே நாட்களில் இரண்டு மீட்டருக்கும் அதிகமாகத் தாங்களே கை கயிற்றால் இழுத்துச் சாதனை படைத்துள்ளனர்.
弘前城天守曳戻しイベント【ひっぱれ げっばれ 弘前城】オープニングセレモニーを開催!
300機のドローン映像で弘前の四季の彩と弘前城を表現しています。 pic.twitter.com/L9mz6HMw1W— 弘前市長 谷川政人 (@TanikawaMasato) August 21, 2026
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் பங்கேற்க உலகெங்கிலும் இருந்து சுமார் 8,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதாவது, தேவைப்பட்ட இடங்களை விட நான்கு மடங்கு அதிகப் போட்டி நிலவியது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 1,800 தன்னார்வலர்களில் ஜப்பானிய குடிமக்களைத் தாண்டி தென்கிழக்காசியா, ஐரோப்பா மற்றும் வடநாட்டைச் சேர்ந்தவர்களும் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். இவர்கள் அனைவரும் 30 மீட்டர் நீளமுள்ள கயிற்றைப் பிடித்து, 80 பேர் கொண்ட சுழற்சி அணிகளாகப் பிரிந்து கோட்டையை லாவகமாக இழுத்துச் சென்றனர்.
இந்தக் கோட்டையானது ஜப்பானின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கலாச்சாரச் சொத்தாகும். எனவே, இதைக் கொஞ்சமும் சேதப்படுத்தாமல் அல்லது உடைத்து மாற்றாமல் அப்படியே நகர்த்துவதற்காக ‘ஹிகியா’ என்ற பழங்கால ஜப்பானிய கட்டட-இடமாற்ற முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. இம்முறையில் கட்டடங்களை இடிக்காமல் உருளைகள் அல்லது தண்டவாளங்கள் மீது வைத்துப் பாதுகாப்பாக நகர்த்த முடியும்.
“ஹிப்பாரே! கெப்பாரே! ஹிரோசகி கோட்டை” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மறுசீரமைப்பு நிகழ்வின் தொடக்க விழாவில், ஜப்பானிய இளவரசி ஹிடாச்சியின் கசுக்கோ மற்றும் சுகாரு குலத்தின் 15-வது தலைவரான ஷின் சுகாரு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந்த மக்கள் பங்கேற்பு இயக்கம் ஆகஸ்ட் இறுதி வரை தொடரவுள்ளது. இதன் மூலம் சுமார் 4,100 பேர் கைகளால் கோட்டையை ஐந்து மீட்டர் வரை நகர்த்துவார்கள். எஞ்சிய 73 மீட்டர் தூரத்தை இந்த ஆண்டின் இறுதிக்குள் எந்திரங்களின் உதவியுடன் நகர்த்தி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கோட்டையின் கல் சுவர்களில் பழுதடைந்த பகுதிகளைச் சரிசெய்யும் பணிகளுக்காகவே இந்த இடமாற்றம் அவசியமானது. இதற்கான பாதுகாப்புப் பணிகள் கடந்த 2015-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டன. கடந்த டிசம்பர் 2024-க்குள் சுவர்கள் சீரமைக்கப்பட்டு, அத்தனையுக் கற்களும் அவற்றின் அசல் இடங்களுக்கே வெற்றிகரமாகத் திருப்பிக் கொடுக்கப்பட்டுவிட்டன.
1611-ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டு, சுகாரு குலத்தின் ஆட்சிப்பீடமாக விளங்கிய இந்த ஹிரோசகி கோட்டை, 1627-ஆம் ஆண்டில் மின்னல் தாக்கி ஏற்பட்ட தீ விபத்தால் ஒருமுறை அழிந்தது. பின்னர் 1810-ஆம் ஆண்டில் மீண்டும் கட்டப்பட்ட இக்கோட்டை, இன்று 200 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டுள்ள ஜப்பானின் வடகிழக்கில் உள்ள ஒரேயொரு எஞ்சிய கோட்டையாகும். தற்போது நடந்துவரும் இந்த நீண்ட காலப் பராமரிப்புப் பணிகள் காரணமாக, இந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகள் கோட்டைக்குள் அனுமதிக்கப்படவில்லை என்றாலும், அனைத்துப் பணிகளும் நிறைவடைந்து 2033-ஆம் ஆண்டில் கோட்டை மீண்டும் பொதுமக்களின் பார்வைக்காகத் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
