“நல்லவேளை நீங்க இந்தப் படத்தில் நடிக்கல, உங்களுக்குத் தான் அதிர்ஷ்டம் அதிகமா இருக்கு!” என இயக்குநர் விக்னேஷ் சிவன், பாலிவுட் நடிகை கியாரா அத்வானியிடம் வெளிப்படையாகப் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘எல்.ஐ.கே’ (லவ் இன்சூரன்ஸ் கம்பெனி). இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, சீமான் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்த இந்தப் படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியானது.
ஆனால், ரூ.200 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம், வெறும் ரூ.70 கோடி மட்டுமே வசூலித்தது. எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியாததால் இயக்குநர் விக்னேஷ் சிவன் உட்பட படக்குழுவினர் அனைவரும் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் கலந்துகொண்ட விக்னேஷ் சிவன், பாலிவுட் நடிகை கியாரா அத்வானியைச் சந்தித்தார். அப்போது, “உங்களுடைய நடிப்பைப் பார்த்து ஈர்க்கப்பட்டுத்தான் ஒரு கதையை உங்களிடம் சொன்னேன். அந்த கதையைத்தான் நான் ‘எல்.ஐ.கே’ படமாக எடுத்தேன்” என்று கூறினார்.
தொடர்ந்து, “நல்லவேளை நீங்க அந்தப் படத்தில் நடிக்கல, தப்பிச்சிட்டீங்க!” என்று விக்னேஷ் சிவன் ஜாலியாகக் கலாய்த்துப் பேசினார். தான் இயக்கிய படத்தையே அவரே வெளிப்படையாக நக்கல் செய்து பேசிய இந்த வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
