அமைதியாகப் பாய்ந்து கொண்டிருக்கும் மலை ஆறுகள் எப்போது கோபமடையும் என்றே கணிக்க முடியாது. அப்படித்தான், திபெத் எல்லையை ஒட்டியுள்ள நேபாளத்தின் மலைப்பகுதிகளில் எந்தவித முன்னறிவிப்புமின்றி திடீரென ஒரு கோரத் தாண்டவம் அரங்கேறியுள்ளது.

மலைகளுக்கு இடையில் அமைதியாக ஓடிக்கொண்டிருந்த ஆற்றில், எதிர்பாராத ஒரு வினாடியில் விண்ணை முட்டும் அளவுக்கு வெள்ளம் கரைபுரண்டு எழுந்தது. திபெத் திசையிலிருந்து ஆக்ரோஷமாகப் பாய்ந்து வந்த இந்தச் சீற்றமான வெள்ளம், வழியில் இருந்த கோஷி ஆற்றில் கலந்து பெருக்கெடுத்தது. இதனால் நேபாளத்தின் முக்கியப் பகுதிகளான ரசுவா  மற்றும் தாடிங் மாவட்டங்கள் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்துள்ளன; இவற்றுடன் நுவாகோட் மாவட்டமும் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது.

 

குறிப்பாக, திபெத் எல்லையில் இருந்து காத்மாண்டுக்கு வடகிழக்கே அமைந்துள்ள ரசுவா மாவட்டத்தின் திமுரே பகுதி முழுவதுமாகச் சீரழிந்து போயுள்ளது. அருகில் உள்ள சியாஃப்ருபெசி  என்ற பகுதியில் நின்றிருந்த வாகனங்கள், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் பொதுமக்களின் பல ஆண்டு உழைப்பால் சேர்த்த சொத்துகள் அனைத்தும் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உருகுலைந்து போயுள்ளன.

 

இந்த எதிர்பாராத பேரிடரில் சிக்கி இதுவரை 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதில் 3 ஆண்களும் ஒரு பெண்ணும் அடங்குவர். இவர்களின் உடல்கள் திரிஷுலி ஆற்றுக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தற்போது நேபாள ராணுவம் களத்தில் இறங்கி, துரிதமான தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

வழக்கமாக இதுபோன்ற வெள்ளப்பெருக்குகள் கனமழையால் ஏற்படுவது வழக்கம். ஆனால், நேபாளத்தின் நீரியல் மற்றும் வானிலை ஆய்வுத் துறை வெளியிட்ட தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது, “இது கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் அல்ல” என்று அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

 

புதிதாக உருவான பனிப்பாறை வெடித்ததாலோ அல்லது பழைய பனிப்பாறை உடைந்து உருகியதாலோ இந்த திடீர் வெள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நிலையில், இது குறித்த அறிவியல் பூர்வமான ஆய்வுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. பனி ஏரி உருகியதன் விளைவாகவே இந்த விபரீதம் நிகழ்ந்திருக்கக்கூடும் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்து ஏற்படுத்திய மற்றொரு பெரும் அதிர்ச்சி என்னவென்றால், இந்த திடீர் வெள்ளப்பெருக்கில் தமிழகத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் சிலரும் சிக்கியுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. எனினும், அவர்கள் அனைவரும் தற்போது பாதுகாப்பாக மீட்கப்பட்டுவிட்டதாகவும், எந்தவித ஆபத்தும் இல்லை என்றும் வந்துள்ள செய்திகள் சற்று நிம்மதியைத் தந்துள்ளன. இயற்கையின் கோபத்திற்கு முன் மனிதனின் பலம் எம்மாத்திரம் என்பதை உணர்த்தும் வகையில் அரங்கேறியுள்ள இந்தச் சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த வெள்ளம் இன்னும் சற்று நேரத்தில் பீகாரருக்குள் வர இருப்பத தற்போது அங்கு மீட்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கிறார்கள்.