நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, தனது அபார ஆட்டத்தால் கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார். 15 வயதே ஆன இவர், ஜஸ்பிரித் பும்ரா போன்ற உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களின் பந்துகளையும் அநாயசமாக சிக்சருக்கு விளாசி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறார்.

தற்போதைய தொடரில் இதுவரை 2 அரைசதங்களுடன் 200 ரன்களைக் கடந்துள்ள சூர்யவன்ஷி, சர்வதேச வீரர்களே வாய்பிளக்கும் வகையில் பேட்டிங் செய்து வருகிறார். இவரது ஆட்டத்திறனைப் பார்த்து, வருங்காலத்தில் கிரிக்கெட் உலகில் யாராலும் முறியடிக்க முடியாத பல சாதனைகளை இவர் படைப்பார் என முன்னாள் வீரர்கள் பலரும் கணித்துள்ளனர்.

சர்வதேசப் போட்டிகளில் விளையாடுவதற்கு சூர்யவன்ஷியின் வயது ஒரு தடையாக இருந்து வந்தது. ஐசிசி (ICC) விதிமுறைகளின்படி, ஒரு வீரர் 15 வயது நிறைவடைந்த பிறகுதான் தேசிய அணிக்குத் தேர்வு செய்யப்பட முடியும். கடந்த மார்ச் 27-ஆம் தேதியுடன் அவருக்கு 15 வயது பூர்த்தியாகியுள்ளது.

வயது வரம்பு சிக்கல் நீங்கியுள்ள நிலையில், முதல் முறையாக இந்திய தேசிய அணியில் இடம்பிடிக்க சூர்யவன்ஷிக்கு பிரகாசமான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, விரைவில் நடைபெறவுள்ள அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் அவர் சேர்க்கப்படலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறைந்த வயதிலேயே இந்திய அணியில் தடம் பதிக்கும் சூர்யவன்ஷியின் இந்த வளர்ச்சி, இந்திய கிரிக்கெட்டின் அடுத்த மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது