ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 15 வயது இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி, தனது அசுர வேக பேட்டிங்கால் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.
நடப்புத் தொடரில் ஏற்கனவே இரண்டு முறை வெறும் 15 பந்துகளில் அரைசதம் கடந்து சாதனை படைத்துள்ள சூர்யவன்ஷி, இதுவரை விளையாடிய போட்டிகளில் 52, 31, 39 மற்றும் 78 என ரன்களை குவித்து அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் முன்னணியில் உள்ளார். இருப்பினும், திங்கட்கிழமை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் அவர் ‘இம்பாக்ட் பிளேயராக’ களம் இறக்கப்பட்டது விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
தான் ஒரு சிறந்த பீல்டர் என்றும், பீல்டிங் செய்ய தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் கூறும் சூர்யவன்ஷி, அணியின் காம்பினேஷன் காரணமாக பீல்டிங் செய்ய முடியாமல் போனதில் மிகுந்த அதிருப்தியில் இருப்பதாக அணியின் உதவிப் பயிற்சியாளர் டிரெவர் பென்னி தெரிவித்துள்ளார்.
மறுபுறம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது முதல் தோல்வியைத் தழுவியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, கேப்டன் இஷான் கிஷனின் அதிரடி 91 ரன்கள் (44 பந்துகள்) உதவியுடன் 216 ரன்களைக் குவித்தது.
இமாலய இலக்கைத் துரத்திய ராஜஸ்தான் அணியின் அதிரடி ஆட்டக்காரர்களை பிரஃபுல் ஹிங்கே மற்றும் சாகிப் ஹுசைன் ஜோடி அடுத்தடுத்து ஆட்டமிழக்கச் செய்து அதிர்ச்சியளித்தது. இறுதியில் ராஜஸ்தான் அணி 159 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனதால், ஹைதராபாத் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தோல்வியுற்ற போதிலும் ராஜஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது, அதேசமயம் ஹைதராபாத் அணி 4-வது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது.
