தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தேமுதிகவுடன் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் பாஜக தேசிய தலைமை கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அதிரடி தகவலை வெளியிட்டுள்ளார்.
செய்தியாளர்களைச் சந்தித்த திண்டுக்கல் சீனிவாசன், அதிமுகவின் தற்போதைய உட்கட்சிப் பூசல்கள் குறித்துப் பேசுகையில், “செங்கோட்டையனின் நிலை தாழ்ந்துவிட்டதைக் கண்டு கண்ணீர் வடிக்கிறோம். எங்களிடம் முதலிடத்தில் இருந்த ஒரு பெரிய மனிதரை, இன்று 5-ஆவது இடத்தில் உட்கார வைத்துள்ளனர். இத்தகைய நிலை யாருக்கும் வரக்கூடாது” என்று வேதனை தெரிவித்தார்.
தேமுதிகவுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்துகிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “மத்திய இணையமைச்சர் எல்.முருகனும், பாஜக தேசிய தலைமையும் தேமுதிகவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். எங்களை நம்பி சிலரும், பாஜகவை நம்பி சிலரும் கூட்டணிக்கு வருகிறார்கள். பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.
மேலும், ராஜ்யசபா சீட் விவகாரத்தில் அதிமுக – தேமுதிக இடையே நிலவும் மனக்கசப்பு குறித்த கேள்விக்கு, “யார் சமைத்தால் என்ன, சாப்பாடும் கூட்டும் நம் இலைக்கு வந்தால் சரி” எனப் பழமொழியைப் பயன்படுத்திப் பதிலளித்தார். இதன் மூலம், தேமுதிக மத்திய அமைச்சரவையில் இடம் கோருவதால் பாஜக நேரடியாகப் பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளதை அவர் உறுதிப்படுத்தினார்.
தற்போது தமிழக அரசியல் களம் நான்கு முனைப் போட்டியை நோக்கி நகர்கிறது. திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு அணிகளுடனும் தேமுதிக திரைமறைவு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்நிலையில் தேமுதிக கோரிக்கையாக 14 சட்டமன்றத் தொகுதிகள், 1 ராஜ்யசபா சீட் மற்றும் மத்திய அமைச்சரவையில் ஒரு பதவி போன்றவைகளை முன் வைத்துள்ளது.
இதில் அதிமுக 8 இடங்களையும், திமுக 6 இடங்களையும் ஒதுக்க முன்வந்துள்ளதாகத் தெரிகிறது.
மத்திய அமைச்சர் பதவி என்ற தேமுதிகவின் நிபந்தனையே, பாஜக நேரடியாகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது. முன்னதாக, தாங்கள் யாரிடமும் பேரம் பேசவில்லை என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியிருந்த நிலையில், திண்டுக்கல் சீனிவாசனின் இந்தத் தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
