தேர்தல் நெருங்கும் நேரங்களில் அரசியல் மோதல்கள் உச்ச நீதிமன்றத்திற்குள் கொண்டு வரப்படுவது ஒரு பிரச்சனையாக உருவெடுத்துள்ளது என்று இந்திய தலைமை நீதிபதி சூர்ய காந்த் கவலை தெரிவித்துள்ளார்.

அசாம் மாநில பாஜகவின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் கடந்த சனிக்கிழமை ஒரு வீடியோ வெளியிடப்பட்டது. அதில், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா துப்பாக்கியால் குறிவைத்துச் சுடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அவர் சுடும் இலக்காக, தலையில் தொப்பி அணிந்த ஒரு நபர் மற்றும் தாடி வைத்திருக்கும் மற்றொரு நபர் சித்திரிக்கப்பட்டிருந்தனர். “பாயிண்ட் பிளாங்க் ஷாட்” (Point-blank shot) என்ற வாசகத்துடன் அந்த வீடியோ பகிரப்பட்டிருந்தது.

இதற்கு எதிர்க்கட்சிகளிடமிருந்து கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், அந்த வீடியோ உடனடியாக நீக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மூத்த வழக்கறிஞர் நிஜாம் பாஷா இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்கக் கோரினார்.

அவர் வாதிடுகையில், “அசாம் முதல்வர் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரைச் சுடுவது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளார். இது பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இது தொடர்பாகப் புகார்கள் அளிக்கப்பட்டும், இதுவரை முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்படவில்லை. எனவே, நீதிமன்றம் இதில் தலையிட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

இந்த மனுவை பரிசீலித்த தலைமை நீதிபதி சூர்ய காந்த் கூறியதாவது, தேர்தல் வரும் போதெல்லாம், தேர்தலின் ஒரு பகுதி உச்ச நீதிமன்றத்திற்குள் நுழைகிறது. இதுவே பெரிய பிரச்சனையாக உள்ளது. இந்த மனுவை ஆய்வு செய்து, விசாரணைக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.

இந்தச் சர்ச்சை குறித்து திப்ருகரில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, “அப்படி ஒரு வீடியோ வெளியானதே எனக்குத் தெரியாது. என் மீது ஐதராபாத்தில் ஓவைசி புகார் அளித்திருப்பது குறித்தும் எனக்குத் தெரியாது. வழக்குப் பதிவு செய்திருந்தால் என்னைக் கைது செய்யட்டும், நான் சிறைக்குச் செல்லத் தயார். வங்கதேச ஊடுருவல்காரர்களை நான் எப்போதும் எதிர்ப்பேன், அதில் எந்த மாற்றமும் இல்லை” என்று ஆவேசமாகப் பதிலளித்தார்.

அசாம் சட்டப்பேரவைக்கு இன்னும் மூன்று மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதல்வர் சர்மா மற்றும் காங்கிரஸ் தலைவர் கௌரவ் கோகாய் இடையேயான அரசியல் மோதல் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இஸ்லாம் சமுதாயத்தினரை நோக்கி குறி வைத்து சுடுவது போன்று முதல்வர் வீடியோ வெளியிட்ட நிலையில் இதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயனும் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கதாகும்.