பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டம் நாத்நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோல்தார் பட்டி பகுதியில், உயர் அழுத்த மின்சார கம்பி மோதியதில் லாரி ஒன்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லாரி சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மேலே சென்ற உயர் அழுத்த மின்சார கம்பி அதன் மீது உரசியது. இதனால் லாரியில் திடீரென தீப்பிடித்து மளமளவென எரியத் தொடங்கியது.

இதனைப் பார்த்த ஓட்டுநர், உடனடியாக லாரியில் இருந்து கீழே குதித்து உயிர் தப்பினார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த மின்சார வாரியத்தினர் உடனடியாக மின் இணைப்பை துண்டித்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. விபத்து மின்சார வாரியத்தின் மெத்தனப் போக்கினால் ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

“>

மேலும் சாலையின் நடுவே தாழ்வாகத் தொங்கிக் கொண்டிருக்கும் பழைய மின்சார கம்பிகளே இத்தகைய விபத்துகளுக்கு முக்கியக் காரணம் என்றும், இது குறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், மின்சாரத் துறையின் அலட்சியம் குறித்து மக்கள் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.