கொங்கு மண்டலத்தின் இதயம் என்று சொல்லப்படும் கரூரில், திமுக மற்றும் அதிமுக இடையே நிர்வாகிகளை இழுக்கும் போட்டி இப்போது “தாதாக்கள்” ரேஞ்சுக்கு எகிறியுள்ளது. கடந்த 8-ம் தேதி, திமுக மாவட்ட நிர்வாகியும் முன்னாள் கவுன்சிலருமான பசுவை கி. வடிவேல், முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்து அந்தப் பகுதியையே அதிரவைத்தார். அதிமுகவினர் இதைக் கொண்டாடித் தீர்ப்பதற்குள், ஒரே நாளில் மனமாற்றம் அடைந்த வடிவேல், இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் மீண்டும் திமுகவிலேயே ஐக்கியமாகி பெரிய ட்விஸ்ட் கொடுத்துள்ளார்.

​திமுகவில் இருந்து அதிமுகவுக்குச் சென்றவரை, 24 மணி நேரத்திற்குள் மீண்டும் தன் பக்கமே இழுத்து வந்து, செந்தில் பாலாஜி தனது அரசியல் பலத்தை நிரூபித்துள்ளார். “ஏன் போனார்? எப்படி மீண்டும் வந்தார்?” என்பது குறித்து கரூரில் ஏகப்பட்ட ரகசியப் பேச்சுக்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், கொங்கு மண்டலத்தைக் கைப்பற்ற திமுகவும், தக்கவைக்க அதிமுகவும் மோதிக்கொள்ளும் இந்த அரசியல் யுத்தம், கரூர் வடிவேல் விவகாரத்தின் மூலம் அடுத்த லெவலுக்குச் சென்றுள்ளது.