சத்தீஸ்கர் மாநிலத்தில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கோடாரியால் வெட்டிக்கொலை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலம் கொஸ்ரா கிராமத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவர், கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி வீட்டில் இருந்து திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறுமியைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், இன்று காலை அந்த ஊருக்கு அருகே உள்ள வயல் பகுதியில் சிறுமி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். சிறுமியின் உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர், உடனடியாகப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, பின்னர் கோடாரியால் கொடூரமான முறையில் வெட்டிக் கொல்லப்பட்டது பிரேதப் பரிசோதனை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக காவல்துறையினர் நடத்திய அதிரடி விசாரணையில், சிறுமியின் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான 24 வயது இளைஞர் ஒருவரைப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த இளைஞரே சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததும், பின்னர் கோடாரியால் வெட்டிக் கொலை செய்ததும் தெரியவந்தது.

குற்றவாளியைக் கைது செய்த காவல்துறையினர், அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திச் சிறையில் அடைத்தனர். பாதுகாப்பு கருதி அந்த இளைஞரின் பெயர் உள்ளிட்ட விவரங்களை வெளியிட காவல்துறையினர் மறுத்துவிட்டனர்.