வழக்கமாக ஒரு முடித்திருத்த நிலையத்திற்குச் சென்றால் கத்தரிக்கோல், சீப்பு, ட்ரிம்மர் போன்றவற்றைத்தான் பார்ப்போம். ஆனால், கென்ய தலைநகர் நைரோபியில் உள்ள ஒரு சிகையலங்கார நிலையம், ஹார்டுவேர் கடை போல காட்சியளிப்பதோடு, அங்கு பயன்படுத்தப்படும் கருவிகள் காண்போரைத் திகைக்க வைக்கின்றன.

சஃபாரி மார்ட்டின்ஸ் என்ற இந்த சிகையலங்கார நிபுணர், பாரம்பரியமான கருவிகளைத் தவிர்த்துவிட்டு, மண்வெட்டி (Spade), பெரிய கத்தரிக்கோல், மற்றும் ரின்ச் (Wrench) போன்ற கருவிகளைக் கொண்டு முடி திருத்தம் செய்கிறார். ‘தி இன்டிபென்டென்ட்’ இதழின் அறிக்கையின்படி, மார்ட்டின்ஸ் மிகவும் கூர்மையான மண்வெட்டியைக் கொண்டு, ஒரு பிளேடு போல லாவகமாகப் பயன்படுத்திக் வாடிக்கையாளர்களுக்குச் சிகையலங்காரம் செய்கிறார்.

அவர் மண்வெட்டியை வாடிக்கையாளரின் தலையில் கையாளும் விதம் பார்ப்பவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தினாலும், சில நிமிடங்களிலேயே மிகவும் துல்லியமான மற்றும் நேர்த்தியான ‘லுக்’ கிடைப்பதாக வாடிக்கையாளர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.

முடி வெட்டி முடித்த பிறகு, அதன் ஓரங்களைச் சரிசெய்யவும், தலைமுடியை ஒருங்கமைக்கவும் பழங்கால இரும்பு இஸ்திரி பெட்டியை (Iron Press) பயன்படுத்துகிறார். இது தனது முன்னோர்களின் ஆசீர்வாதம் என்றும், இது வெறும் வேலை அல்ல, ஒரு கலை என்றும் அவர் கூறுகிறார்.

ருவாண்டாவில் பிறந்த மார்ட்டின்ஸ், 2018-இல் பள்ளிப் படிப்பின் போது நண்பர்களிடம் கடன் வாங்கிய இயந்திரத்தைக் கொண்டு முடி திருத்தத் தொடங்கினார். கடந்த ஐந்து ஆண்டுகளாகப் புதுமையைப் புகுத்த எண்ணிய அவர், பாரம்பரிய கருவிகளைக் கைவிட்டு, இத்தகைய வினோத கருவிகளைப் பயன்படுத்தத் தொடங்கினார். அதுவே அவரை இன்று உலகப் புகழ்பெற்ற கலைஞராக மாற்றியுள்ளது.

நைரோபியில் முடி திருத்துவதற்கான சராசரி கட்டணத்தை விட மார்ட்டின்ஸ் அதிக கட்டணம் வசூலிக்கிறார். ஒரு ஹேர்கட் செய்ய சுமார் 1500 கென்ய ஷில்லிங் (இந்திய மதிப்பில் சுமார் ₹1,050) வரை வாங்குகிறார். கட்டணம் அதிகமாக இருந்தாலும், அவரது வினோத முறையைப் பார்க்கவும், சமூக வலைதளங்களில் வைரலாகவும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டாக் போன்ற தளங்களில் 10 லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பாளர்களைக் கொண்டுள்ள மார்ட்டின்ஸ், தற்போது கென்யாவின் மிக முக்கியமான பிரபலமாக உருவெடுத்துள்ளார்.