தமிழகத்தில் அவசர மருத்துவ உதவிக்கு உயிர்நாடியாக விளங்கும் 108 ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கையை தற்போதைய தவெக அரசு உடனடியாக 2,500 ஆக உயர்த்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிரடியாகக் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் தற்போது அடிப்படை வசதிகள் கொண்ட 977 ஆம்புலன்ஸ்கள் உள்பட மொத்தம் 1,353 ஆம்புலன்ஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருவதாகவும், இது தற்போதைய மக்கள் தொகை பெருக்கத்திற்கு விபத்து காலங்களில் அவசர உதவி செய்யப் பற்றாக்குறையாக இருப்பதாகவும் புள்ளிவிபரங்களோடு சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், கடந்த 2005-ஆம் ஆண்டு தான் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது, இந்த 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை நாடு முழுவதும் கொண்டு வந்ததில் பெருமிதம் கொள்வதாக அன்புமணி ராமதாஸ் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். இந்தத் திட்டம் ஆண்டொன்றுக்கு சுமார் 3 லட்சம் தாய்மார்களின் உயிரைக் காப்பற்றி பெருமை தேடித்தந்துள்ளதாகவும், எனவே தமிழக அரசு மக்களின் உயிர் காக்கும் இந்த ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கையை 2,500 ஆக உயர்த்தி மருத்துவத்துறையை மேம்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். பாமக தலைவரின் இந்த ஆக்கப்பூர்வமான கோரிக்கை அரசியல் வட்டாரத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
