தமிழக முதலமைச்சராக ‘தளபதி’ விஜய் அவர்கள் முறைப்படி பதவியேற்றுள்ளதை முன்னிட்டு, தவெக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மாநிலம் முழுவதும் பல்வேறு விசித்திரமான வேண்டுதல்களையும் நேர்த்திக்கடன்களையும் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், தற்காலிக சபாநாயகராக இருந்த சோழவந்தான் தொகுதி தவெக எம்.எல்.ஏ கருப்பையா, விஜய் அவர்கள் முதலமைச்சராகப் பதவியேற்றதை ஒட்டி, சோழவந்தான் அருகே உள்ள ஒரு விவசாயக் கிணற்றில் இறங்கி விசித்திரமான முறையில் தனது வேண்டுதலை நிறைவேற்றியுள்ளார்.
முதல்வர் விஜய் பதவியேற்றுள்ளதையொட்டி கிணற்று நீரில் மிதந்து ஜலபிரதட்சணம் செய்து தவெக MLA கருப்பையா வேண்டுதலை நிறைவேற்றினார்#Madurai | #TVK | #CMVijay pic.twitter.com/7zf93P9InV
— PttvOnlinenews (@PttvNewsX) May 18, 2026
அவர் கிணற்றுத் தண்ணீரின் மேல் மல்லாக்க படுத்தபடி, தண்ணீரில் அசால்ட்டாக மிதந்து ‘ஜலபிரதட்சணம்’ செய்து அசத்தியுள்ளார். சுமார் 30 நிமிடங்கள் தண்ணீரில் மிதந்தபடியே ‘ஜலப்பிரதட்சண ஆசனம்’ செய்து, தனது கட்சியின் தலைவரான முதலமைச்சர் விஜய்யின் ஆட்சி சிறக்க வேண்டும் என வேண்டிக்கொண்டார். தவெக எம்.எல்.ஏ ஒருவர் கிணற்றுத் தண்ணீரில் 30 நிமிடம் மிதந்து விசித்திரமாக வேண்டுதல் நிறைவேற்றிய இந்தச் சம்பவம் அந்தப் பகுதி கிராம மக்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
