விருதுநகர் மாவட்டம் முள்ளிசேவல் அங்கன்வாடி மையத்தை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார். அப்போது மகளிர் உரிமைத் தொகை கேட்டு பெண்கள் மனு கொடுக்க வந்த போது அமைச்சர் இப்படி நகை போட்டு வந்தால் எப்படி பணம் கிடைக்கும்? நகை அணிந்து வந்தால் உரிமை தொகை கிடைக்காது என நகைச்சுவையாக கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது, நலத்திட்டங்களை தருகிறோம் என்ற பெயரில் திமுக அமைச்சர்கள் பெண்களை ஏளனமாக பேசுவது கண்டிக்கத்தக்கதாகும். உரிமை தொகையை கேட்ட பெண்களிடம் அமைச்சர் ராமச்சந்திரன் நாகரிகமற்ற முறையில் பேசி இருக்கிறார்.
மூக்கு, காதில் எல்லாம் நகை போட்டு இருந்தால் ஆயிரம் ரூபாய் கொடுக்க மாட்டோம் என கூறியுள்ளார். அரசு பதவியின் மாண்பை மறந்து இது போன்ற கேலி கிண்டல்களில் ஒரு அமைச்சர் ஈடுபடுவது கண்டனத்திற்கு உரியது ஆகும். 1000 ரூபாய் உரிமை தொகை வாங்குவோரெல்லாம் நகை போடக்கூடாதா? உரிமை தொகையை கேட்ட பெண்களிடம் நாகரிகமற்ற முறையில் பேசிய அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
