தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் பேசிக்கொண்டிருந்தபோது, தங்களைப் பேச சபாநாயகர் அனுமதிக்கவில்லை எனக் கூறி திமுகவினர் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். இதன் பின்னர் சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, திமுக அரசு கொண்டு வந்த திட்டங்கள் குறித்து தற்போதைய அமைச்சர் முழுமையாக அறியாமல் பேசி வருவதாகக் குற்றம் சாட்டினார். குறிப்பாக, குன்னூர் பகுதியில் பக்தர்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் வசதியாக ரூ.10 கோடியில் கார் பார்க்கிங் கட்ட எடுக்கப்பட்ட நடவடிக்கை தொலைநோக்கு பார்வை கொண்டது என்றும், நலிவடைந்த திருக்கோவில்களின் நிலையை மேம்படுத்தவும் வருவாயைப் பெருக்கவும் கொண்டு வரப்பட்ட இத்திட்டத்தை அறிவுசார்ந்த அனைவரும் வரவேற்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய சேகர்பாபு, நெருக்கடி நிலைக் காலத்திற்கே அஞ்சாத பாரம்பரியத்தைக் கொண்ட இயக்கம் திமுக என்பதால், தற்போதைய அரசின் உருட்டல் மிரட்டல்களுக்கு எல்லாம் ஒருபோதும் பயப்படாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். ‘மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமில்லை’ என்ற பழமொழியைச் சுட்டிக்காட்டிய அவர், தங்களின் செயல்பாடுகளில் எந்தத் தவறும் இல்லாததால் இத்தகைய மிரட்டல்களுக்கு திமுக பயந்து நிற்காது என்றும், குற்றச்சாட்டுகள் இருந்தால் அதனை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கட்டும் என்றும் சவால் விடுத்தார். மேலும், திமுக என்பது அடிக்க அடிக்க உயர்ந்து எழும்பும் பந்தைப் போன்றது என்றும், தங்களை ஒடுக்க நினைத்தால் மேலும் மேலும் நிமிர்ந்து எழுந்து திமிறி நிற்போம் என்றும் சேகர்பாபு காரசாரமாகத் தெரிவித்தார்.