இந்திய கிரிக்கெட்டின் வளர்ந்து வரும் இளம் நட்சத்திரமான 15 வயது வைபவ் சூர்யவன்ஷி, சர்வதேச கிரிக்கெட்டில் மற்றொரு வரலாற்று மைல்கல்லை எட்டவுள்ளார். தனது அதிரடி ஆட்டத்தால் ஜூனியர் கிரிக்கெட், உள்நாட்டு போட்டிகள், இந்தியா ‘ஏ’ அணி மற்றும் ஐபிஎல் தொடர்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த அவர், தற்போது இந்திய டி20 அணியிலும் இடம்பிடித்துள்ளார்.

இன்று (ஜூன் 26) அயர்லாந்து அணிக்கு எதிராக நடைபெறும் முதலாவது டி20 போட்டியில் வைபவ் அறிமுக வீரராகக் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு அவர் விளையாடினால், இந்திய ஆண்கள் கிரிக்கெட் வரலாற்றிலேயே மிக இள வயதில் சர்வதேச போட்டியில் அறிமுகமான வீரர் என்ற மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து புதிய சரித்திரம் படைப்பார்.

வைபவ் சூர்யவன்ஷியின் அசாத்திய திறமையை அடையாளம் கண்டு ஐபிஎல் தொடரில் விளையாட வாய்ப்பளித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளரும், இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளருமான ராகுல் டிராவிட், வைபவ் குறித்து தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். பந்துவீச்சாளர்களின் வேகத்தை மிக விரைவாகக் கணிக்கும் அசாத்திய திறமை வைபவிடம் இருப்பதாகப் பாராட்டியுள்ள டிராவிட், அவரிடம் இருக்கும் கிரிக்கெட் அறிவும், பயமற்ற ஆட்டமுமே அவனை ஒரு ‘ஸ்பெஷல் பிளேயர்’ ஆக மாற்றுகிறது என்று பிபிசி (BBC) ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

மேலும், இவரைப் போன்ற திறமையாளர்கள் பிறப்பிலேயே சில தனித்துவமான திறன்களுடன் பிறக்கிறார்கள் என்றும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்தபோது அவனது கடுமையான உழைப்பையும், அவன் எதிர்கொண்ட ஆயிரக்கணக்கான பயிற்சிப் பந்துகளையும் தான் நேரில் பார்த்ததாகக் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் நுழையும் வைபவிற்கு முறையான வழிகாட்டுதலும், ஆதரவும் வழங்கப்பட வேண்டும் என்றும், அவனது சுதந்திரமான ஆட்டத்திற்குத் தடை விதிக்காமல் பாதுகாப்பாக வழிநடத்த வேண்டும் என்றும் டிராவிட் அறிவுறுத்தியுள்ளார்.