திரிபுரா மாநிலம் அகர்தலால்  பகுதியில் வசித்து வரும் காமேஷ் மியான்  என்பவர் ரப்பர் வாரியத்தின் ஊழியராக பணியாற்றி வருகிறார்.  இவர் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்.  ஒரு நாள் இரவு காளி தேவி இவர் கனவில் வந்ததாகவும்,  தனக்கு பூஜை செய்யுமாறு கூறியதாக  தனது குடும்பத்தினரிடையே தெரிவித்ததோடு,   பூஜை ஏற்பாடுகளை செய்ய உதவும் மாறும் கேட்டுக்கொண்டார்.  ஆரம்ப காலகட்டத்தில் காமேஷின் குடும்ப உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போதிலும்,  அவரது விடாப்பிடியான பிடிவாதத்தின் காரணமாக பின்பு ஒப்புக்கொண்டனர்.  அதன்படி, 

2014 இல் தொடங்கப்பட்ட காளி பூஜை ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு தற்போது பத்தாவது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது.  பத்தாவது ஆண்டாக காமேஷ் தொடர்ச்சியாக காளி பூஜை நடத்தி வருகிறார்.  இந்த பூஜையானது மத குருக்களின் தலைமையில் நடத்தப்படாமல் காமேஷின்  முழு முயற்சியோடு நடத்தப்படுவதோடு,  இந்த பூஜையின் முடிவில் சுமார் 1500 இந்து மக்களுக்கு சிறப்பு விருந்தையும் ஒவ்வொரு வருடமும் அளித்து வருகிறார். 

எவ்வாறாயினும் இவரது இந்த செயல்பாடு காரணமாக உள்ளூர் மசூதிக்குள் நுழைவதற்கான கட்டுப்பாடு,  முஸ்லிம் சமூகத்திலிருந்து தனிமைப் படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் அவரது குடும்ப உறுப்பினர்களின் மீது தொடுக்கப்பட்டாலும்,  இவர் இந்த பூஜை மீதான ஆர்வத்தை சிறிதளவும் குறைக்காமல் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறார்.  இது இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவதாக அப்பகுதி பொதுமக்கள் இதுகுறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.