பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரோஹித் குமார் என்ற இளைஞரின் கதை, தோல்விகளால் துவண்டு கிடப்பவர்களுக்கு ஒரு மாபெரும் மருந்தாக அமைந்துள்ளது. குடும்ப வறுமை காரணமாக, இவரது தாய் வரட்டி (சாணித் தட்டி) விற்று பிழைப்பு நடத்தி வந்துள்ளார். ரோஹித் குமார் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தோல்வியடைந்ததால், வேறு வழியின்றி தெருத் தெருவாகக் காய்கறி விற்று வந்துள்ளார். ஆனால், தனக்குக் கிடைக்காத கல்வி மற்றவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்ற வைராக்கியத்தில், தனது வீட்டின் மொட்டை மாடியையே வகுப்பறையாக மாற்றியுள்ளார்.

வெறும் 4 மாணவர்களுடன் தொடங்கிய இவரது கல்விப் பயணம், இன்று காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை 1000 மாணவர்களுக்குக் கல்வி வழங்கும் ஆலமரமாக வளர்ந்து நிற்கிறது. ​10-வது கூட பாஸ் ஆகாதவர் எப்படிப் பாடம் எடுப்பார் எனத் தொடக்கத்தில் ஊர் மக்கள் கேலி செய்தாலும், ரோஹித் குமாரின் எளிமையான அறிவியல் விளக்கங்கள் மாணவர்களின் இதயங்களை வென்றன. வெறும் 125 ரூபாய் கட்டணத்தில் இவர் நடத்தும் இந்த வகுப்பறையை ‘தி பெட்டர் இந்தியா’ வீடியோவாக வெளியிட, அது வைரலாகி ஜோஹோ (Zoho) நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ ஸ்ரீதர் வேம்புவின் கவனத்தையே ஈர்த்துள்ளது.

“இதைப் பார்க்கும்போது பாரதத்தின் எதிர்காலத்தின் மீது பெரும் நம்பிக்கை பிறக்கிறது” எனக் கூறியுள்ள அவர், தனது அறக்கட்டளை மூலம் உதவி செய்யவும் முன்வந்துள்ளார். மதிப்பெண்கள் ஒருவரது வாழ்க்கையைத் தீர்மானிக்காது என்பதற்கு ரோஹித் குமார் ஒரு வாழும் உதாரணமாகத் திகழ்கிறார்.