கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனி கொட்டை அருகே உள்ள கடம்பகுட்டை மலை கிராமத்தில், போதிய மருத்துவ பரிசோதனை இல்லாமல் கருத்தரித்த 40 வயதான கர்ப்பிணி மல்லம்மாளுக்கு, ஹீமோகுளோபின் அளவு மிகவும் குறைவாக இருந்ததால், அவருடைய பெண் குழந்தை கருவிலேயே உயிரிழந்து பிறந்துள்ளது. இந்த சம்பவம் மருத்துவ விழிப்புணர்வு  இல்லாதது  பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மல்லப்பன் – மல்லம்மாள் தம்பதிக்கு ஏற்கனவே ஏழு குழந்தைகள் உள்ளனர். இவர்களில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது பத்தாவது முறை கர்ப்பமாக இருந்துள்ளார் மல்லம்மாள். இவரது முந்தைய ஒன்பது பிரசவங்களும் மருத்துவமனையை நாடாமல், வீட்டிலேயே சுகபிரசவமாக நடந்திருந்தன. இதனால் இந்த முறை மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைக்கு அவர் ஒருபோதும் ஒத்துக்கொள்ளாமல் இருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மருத்துவப்பணியாளர்கள் மலை கிராமத்திற்கே சென்று மருத்துவ முகாம் நடத்தி, மல்லம்மாளை பரிசோதித்தபோது, அவருடைய ஹீமோகுளோபின் அளவு 2 யூனிட் என்ற மோசமான நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவானதால், பலமுறை சமாதான பேச்சுவார்த்தைக்கு பிறகு அவரை தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவருக்கு 5 யூனிட் ரத்தம் செலுத்தப்பட்டது.

தொடர்ந்த சிகிச்சைக்குப் பிறகு, சுகபிரசவமாக குழந்தை பிறந்த நிலையில், குழந்தை ஏற்கனவே கருவிலேயே உயிரிழந்திருப்பது தெரியவந்தது. தற்போதைய நிலையில், மல்லம்மாளுக்கு சளி, இருமல் மாதிரி லேசான சிரமம் இருந்தாலும், மருத்துவ கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலைசீரான  பின்பு குடும்பக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ள உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம், கிராமப்புறங்களில் மருத்துவ விழிப்புணர்வு மற்றும் பெற்றோர் கல்வி பற்றிய தேவை மிக முக்கியம் என்பதை மீண்டும் ஒரு முறை வலியுறுத்துகிறது.