வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வரதட்சணை கொடுமைக்கு ஆளான நர்கீஸ் என்ற பெண், தனது இரு கால்கள் முறிந்த நிலையில் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டு மனு அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த நர்கீஸ், கடந்த 2023-ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றும் பாபாவின் மகன் காஜா ரபிக்குடன் திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

திருமணத்தின்போது 30 பவுன் நகை, இருசக்கர வாகனம், ரூ.3 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.6 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டதாகவும், அதற்குப் பிறகும் மேலும் வரதட்சணை கோரப்பட்டதால் கணவர் அடிக்கடி தகராறு செய்து வந்ததாகவும் கூறியுள்ளார்.

கடந்த மாதம் 3ஆம் தேதி தனது கணவர் மாடியிலிருந்து தள்ளி கொலை முயற்சி செய்ததாகவும், இதனால் இடுப்பு மற்றும் இரு கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் தன்னை நகர்த்த இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும் நர்கீஸ் தனது மனுவில் பதிவு செய்துள்ளார். இதுவரை உறவினர்களிடம் கடன் பெற்று சிகிச்சைக்காக ரூ.6 லட்சம் செலவழித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இப்புகாரின் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டதாகவும், அரியூர் போலீசார் காஜா ரபீக்கை கைது செய்து, கொலை முயற்சி, வரதட்சணை துன்புறுத்தல், பெண் மீது வன்முறை உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பின்னர் கைது செய்யப்பட்ட காஜா ரபீக், வேலூர் கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அவரை சிறையில் அடைக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது போன்ற சம்பவங்கள், பெண்கள் எதிர்கொள்ளும் தொடரும் சமூக அநீதி குறித்து கவனத்தை செலுத்த வைக்கிறது.