நாட்டின் 77-வது குடியரசு தின விழாவையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் செவ்வாய்க்கிழமை மாலை தேநீர் விருந்து நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழக ஆளுநர், உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி, சென்னை காவல் ஆணையர் அருண் மற்றும் முன்னாள் ஆளுநர்கள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்றனர்.
அரசு அதிகாரிகள் மற்றும் நீதித்துறை சார்ந்தவர்கள் ஒருபுறம் இருக்க, இந்த விருந்தில் அரங்கேறிய அரசியல் தலைவர்களின் சந்திப்புகள் தமிழக தேர்தல் களம் குறித்த புதிய விவாதங்களைக் கிளப்பியுள்ளன.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தேமுதிக மற்றும் புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் இன்னும் தங்களது கூட்டணி நிலைப்பாட்டை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்நிலையில், தேநீர் விருந்தில் பங்கேற்ற பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை, தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் சந்தித்துப் பேசினார். சுமார் 10 நிமிடங்கள் வரை நீடித்த இந்தத் திடீர் ஆலோசனையில், தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்த ஆரம்பக்கட்டப் பேச்சுவார்த்தைகள் நடந்திருக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
இதேபோல், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியுடன் அதிமுக மற்றும் பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் தனித்தனியாக உரையாடினர். இதுநாள் வரை மௌனம் காத்து வந்த சிறிய கட்சிகளுடன் முக்கியக் கட்சிகள் பேச்சுவார்த்தையைத் தொடங்கியிருப்பது, வரும் நாட்களில் தமிழக அரசியலில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். இந்தத் தேநீர் விருந்து சந்திப்புகள், விரைவில் ஒரு வலுவான கூட்டணி அறிவிப்பாக உருவெடுக்குமா என்ற எதிர்பார்ப்பு அரசியல் தொண்டர்களிடையே அதிகரித்துள்ளது.
