“தேர்தல் நேரத்தில் மட்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி, அவதூறுகளைப் பரப்புவதை விடுத்து மணிப்பூர் வன்முறைக்கு பதில் சொல்ல வேண்டும்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேசமாக உரையாற்றினார்.

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே உள்ள திருமலைசமுத்திரத்தில், திமுக டெல்டா மண்டல மகளிர் அணி சார்பில் “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், அமைச்சர் கே.என்.நேரு முன்னிலை வகித்தார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மாநாட்டில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்று பிரதமர் அபாண்டமாகப் பொய் சொல்கிறார். இந்தியாவிலேயே பெண்கள் அதிக அளவில் பணிக்குச் செல்வதும், பாதுகாப்பாக இருப்பதும் தமிழகத்தில்தான் என்பதை இந்த மாநாட்டுத் திடலே நிரூபிக்கிறது. 2023 முதல் பற்றி எரியும் மணிப்பூரில் 260-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர், ஒரு லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். அங்கு அமைதியை ஏற்படுத்த முடியாத பா.ஜ.க., அமைதிப் பூங்காவான தமிழகத்தைப் பார்த்து அவதூறு பேசுவதா?” என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து அதிமுக-பாஜக கூட்டணி குறித்துப் பேசிய அவர், “கடந்த தேர்தல்களில் தனித்தனியாகவும், மறைமுகமாகவும் கைகோர்த்துத் தோற்றுப்போனவர்கள், இப்போது மீண்டும் ஒட்டியெடுத்து ‘தேசிய ஜனநாயக கூட்டணி’ என்று வந்திருக்கிறார்கள். இது எடப்பாடி பழனிசாமி தனது பதவியைத் தக்கவைக்க உருவாக்கியுள்ள பிளாக்மெயில் கூட்டணி. டெல்லியில் இருந்தபடி தமிழகத்தை ஆளலாம் என்று நினைக்கும் பாஜகவிற்கு, இந்த எடுபிடிக் கூட்டணி மூலம் மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்” என்று சாடினார்.