திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரைச் சேர்ந்த சபரி கண்ணன் என்ற மாணவர், அப்பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஜூலை 4ம் தேதி பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மாணவர் சபரி தவறான நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி, அவரை ஆசிரியர்கள் கண்டித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையடுத்து, “ஜூலை 7ம் தேதி பெற்றோருடன் பள்ளிக்கு வரும்படி” ஆசிரியர்கள் அறிவுறுத்தினாலும், மாணவர் பெற்றோரிடம் இதை தெரிவிக்கவில்லை. மன வேதனையில் இருந்த சபரி, பள்ளிக்குள் விஷம் குடித்து விட்டதாக கூறப்படுகிறது.

விஷம் குடித்த நிலையில் வழிபாட்டு கூட்டத்தில் மயங்கி விழுந்த சபரியை, பள்ளி நிர்வாகம் அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தது. பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

ஆனால், பல நாட்களாக சிகிச்சை பெற்ற வந்தும், மாணவர் சபரி கடந்த சில தினங்களுக்கு முன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த தகவல் மாணவரின் குடும்பத்தினரையும், உறவினர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

சபரியின் மரணத்தால் எழுந்த சோகத்தைத் தொடர்ந்து, மாணவரின் உறவினர்கள் வீரவநல்லூர் காவல் நிலையத்தின் முன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

பின்னர் போலீசார் மற்றும் அதிகாரிகள் உரிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, போராட்டத்தை கைவிடச் செய்தனர். ஆனால் அதற்கிடையில், பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு பேருந்துகள் அடையாளம் தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டன. இந்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக, மாணவனின் உறவினர்கள் மீது பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியதாகக் கூறி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் மாணவரின் பெற்றோர், “பள்ளி நிர்வாகமே பேருந்துகளுக்கு தீ வைத்து, வழக்கை திசைதிருப்ப முயற்சி செய்கிறது” எனக் கடுமையாக குற்றம் சுமத்தியுள்ளனர்.

மாணவரின் மரணம் தொடர்பாக சீரான விசாரணை நடத்த வேண்டும், மாணவர் மீது மன அழுத்தம் கொடுத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மாணவர் மனநிலை, பள்ளி கட்டுப்பாடுகள் மற்றும் பெற்றோர் தகவலறிதல் குறித்த பல கேள்விகளை எழுப்பியுள்ளது.