ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில், எண்களைச் சரியாக எழுதவில்லை என்பதற்காக நான்கரை வயது சிறுமியை அவளது தந்தையே அடித்துக் கொன்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாகக் கொடூரத் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த கிருஷ்ணா ஜெய்ஸ்வால் (31), தனது குடும்பத்துடன் ஃபரிதாபாத் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். தனியார் நிறுவனத்தில் இரவுப் பணியில் இருக்கும் இவர், பகலில் தனது குழந்தைகளுக்கு வீட்டிலேயே பாடம் சொல்லித் தந்துள்ளார்.
புதன்கிழமை அன்று, தனது நான்கரை வயது மகளிடம் 1 முதல் 50 வரையிலான எண்களை எழுதும்படி கிருஷ்ணா கூறியுள்ளார். சிறுமி அதனை எழுதத் தவறியதால் ஆத்திரமடைந்த அவர், குழந்தையை மிருகத்தனமாகத் தாக்கியுள்ளார். இதில் குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, மயக்கமடைந்தது.
குழந்தை உயிரிழந்ததை அறிந்த கிருஷ்ணா, தனது குற்றத்தை மறைக்கத் திட்டமிட்டார். குழந்தை விளையாடும்போது படிக்கட்டில் இருந்து தவறி விழுந்துவிட்டதாகக் கூறி, மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். ஆனால், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தனது மனைவி ரஞ்சிதாவிடமும் இதே கதையைக் கூறி நம்ப வைக்க முயன்றார். இருப்பினும், சம்பவத்தின் போது வீட்டில் இருந்த இவர்களது 7 வயது மகன், தந்தை தனது தங்கையைத் தாக்கிய உண்மையை தாயிடம் தெரிவித்துள்ளான். குழந்தையின் உடலில் இருந்த காயத் தழும்புகளைக் கண்டு சந்தேகமடைந்த தாய் ரஞ்சிதா, காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில், செக்டார் 58 காவல்துறையினர் கிருஷ்ணா ஜெய்ஸ்வாலை கைது செய்தனர். அவர் மீது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவு 103(1)-ன் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. “குழந்தையின் தலையில் ஏற்பட்ட பலத்த காயமே மரணத்திற்குக் காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்று காவல்துறை செய்தித் தொடர்பாளர் யஷ்பால் தெரிவித்தார்.
மேலும் வீட்டிலேயே கல்வி கற்பிப்பதாகக் கூறி, பெற்ற மகளையே தந்தை அடித்துக் கொன்ற இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
