உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில், காதலியின் வீட்டிற்குச் சென்ற வாலிபர் ஒருவர், அத்தையிடம் பிடிபடாமல் இருக்க இரும்புப் பெட்டிக்குள் ஒளிந்து கொண்ட நிலையில், மூச்சுத்திணறி உயிருக்குப் போராடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, கான்பூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும், அதே பகுதியில் ஏழு வீடுகள் தள்ளி வசிக்கும் இளம் பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். வெள்ளிக்கிழமை காலை பெண்ணின் குடும்பத்தினர் வேலைக்குச் சென்ற வேளையில், அந்தப் பெண் தனது காதலனை வீட்டிற்கு அழைத்துள்ளார். மதிய வேளையில் அந்த இளைஞர் காதலி வீட்டிற்குச் சென்றுள்ளார்.
यूपी | कानपुर में बॉयफ्रेंड अपनी गर्लफ्रेंड से मिलने के लिए उसके घर पहुंचा। उसी वक्त गर्लफ्रेंड के घर वाले आ गए। छिपाने के लिए गर्लफ्रेंड ने बॉयफ्रेंड को लोहे के बक्से में बंद कर दिया। बक्से से आहट हुई तो उसे खुलवाया गया, तब बॉयफ्रेंड बाहर निकला। पुलिस ने हिरासत में लिया। pic.twitter.com/W2I1CFOtQL
— Sachin Gupta (@SachinGuptaUP) January 23, 2026
அப்போது, பக்கத்து வீட்டில் வசிக்கும் அந்தப் பெண்ணின் அத்தைக்கு, வீட்டில் ஏதோ சத்தம் கேட்பதைக் கண்டு சந்தேகம் எழுந்தது. உடனடியாக அவர் வீட்டிற்கு வந்து கதவைத் தட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், தனது காதலனை அங்கிருந்த ஒரு பெரிய இரும்புப் பெட்டிக்குள் (Trunk box) ஏறுமாறு கூறி, உள்ளே வைத்துப் பூட்டினார்.
பெண் கதவைத் திறந்ததும், அத்தைக்கு சந்தேகம் தீரவில்லை. “யாரோ உள்ளே வருவதைப் பார்த்தேன், அவர் மாயமாக மறைந்துவிட முடியாது” என்று கூறி, பிரதான கதவைப் பூட்டிய அத்தை, பெண்ணின் தாய் மற்றும் சகோதரருக்குத் தகவல் கொடுத்தார். அவர்கள் வந்து வீடு முழுவதும் தேடினர். கட்டிலுக்கு அடியிலும், அலமாரிகளிலும் தேடியும் யாரும் சிக்கவில்லை.
சுமார் 45 நிமிடங்கள் கடந்த நிலையில், பெட்டிக்குள் இருந்த இளைஞருக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு மூச்சுத்திணறல் உண்டானது. உயிருக்குப் பயந்த அவர், பெட்டியை உள்ளிருந்து பலமாகத் தட்டியுள்ளார். சத்தம் கேட்டதும் குடும்பத்தினர் அந்தப் பெட்டியைத் திறக்க முயன்றனர். ஆனால், “உள்ளே துணிகள் இருக்கிறது” என்று கூறி பெண் சாவியைக் கொடுக்க மறுத்து வாக்குவாதம் செய்துள்ளார்.
தகவலறிந்து வந்த போலீஸார் முன்னிலையில் பெட்டி திறக்கப்பட்டது. அப்போது வியர்வையில் நனைந்து, மயக்க நிலையில் இருந்த இளைஞர் தடுமாறியபடி வெளியே வந்தார். இதைக் கண்டு அங்கிருந்த போலீஸார் சிரித்தாலும், ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள் அந்த இளைஞரைத் தாக்க முயன்றனர். போலீஸார் அவர்களைத் தடுத்து இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்ததாக அந்த இளைஞர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்ணின் குடும்பத்தார் புகார் அளிக்கும் பட்சத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தெரிவித்தனர்.
