தூத்துக்குடி மாவட்டத்தில் கழுகாசலமூர்த்தி கோவில் மலையுச்சியில், குரங்குகள் சூழ்ந்ததால் பயந்து நிலைதடுமாறி கீழே விழுந்து 24 வயது புதுப்பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடியை உலுக்கியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஒரு கிராமத்தை சேர்ந்த அனிதா (24) என்ற பெண்ணிற்கும், வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் சுரேஷ் (29) என்பவருக்கும் கடந்த மாதம் தான் திருமணம் நடந்துள்ளது.
இந்நிலையில், சுரேஷ் சொந்த ஊர் திரும்பியதை அடுத்து, இந்த இளம் தம்பதியினர் கழுகுமலை உச்சிப்பிள்ளையார் கோவில் மலைமீது ஏறி சாமி கும்பிட்டு விட்டு,அங்குள்ள குரங்குகளுக்குப் பழம் கொடுத்துக் கொண்டிருந்தபோது, திடீரென குரங்கு கூட்டம் அவர்களைச் சூழ்ந்துள்ளது.
இதனால் பயந்துபோன அனிதா அச்சத்துடனே பின்வாங்கியபோது நிலைதடுமாறி மலையுச்சியிலிருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
கண்ணெதிரே மனைவி பலியானதைக் கண்டு கணவர் சுரேஷ் உடலின் அருகே அமர்ந்து கதறி அழுத காட்சி பார்ப்போரைக் கண் கலங்க வைத்த நிலையில், தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவுசெய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
