திருப்பூர் மாவட்டம் அருகே, யூடியூப் வீடியோக்களைப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்க்க முயன்ற 32 வயது இளம் தாய் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர வைத்துள்ளது.
சசிகலா (32) என்ற பெண்ணிற்கு ஏற்கனவே முதல் குழந்தை அறுவை சிகிச்சை மூலம் பிறந்திருந்த நிலையில், தனது இரண்டாவது குழந்தையை எப்படியாவது இயற்கை முறையில் பெற்றெடுக்க வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார்.
இதற்காக மருத்துவமனைக்குச் செல்லாமல், தொடர்ந்து யூடியூப் வீடியோக்களைப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் மேற்கொண்டுள்ளார். இதில் சசிகலாவிற்குப் பெண் குழந்தை நல்லபடியாகப் பிறந்த போதிலும், பிரசவத்திற்குப் பிறகு நஞ்சுக்கொடி வெளியேறாமல் உடலில் சிக்கியதால், பயங்கர ரத்தப்போக்கு ஏற்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.
பிறந்த குழந்தை நலமாக உள்ள சூழலில், முறையான மருத்துவ விழிப்புணர்வு இல்லாததால் ஒரு இளம் தாயின் உயிர் பறிபோயுள்ள இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
